முப்படைகளுக்கும் ஒரே தளபதி; நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை – பிரதமர் மோடி பேச்சின் முக்கிய அம்சங்கள்

73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அதன் முக்கிய அம்சங்கள் :

* சட்டப்பிரிவு 370 நீக்கத்தின் மூலம் ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற எண்ணம் இன்று நனவாகியுள்ளது.

* சுற்றுலாத் துறையில் மாபெரும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. 2022-ல் இந்தியாவுக்குள்ளேயே ஒவ்வொருவரும் 15 சுற்றுலாத் தலங்களுக்காவது செல்ல வேண்டும்.

* ஒற்றுமையை உறுதி செய்யவும் திறமை வாய்ந்த தலைமையை வழங்கவும் முப்படைகளுக்கும் ஒரே தளபதி உருவாக்கப்படுவார்.

* ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

* 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ள இந்தியா, அடுத்த 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும்.

* உள்கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளோம்.

* தொழில்புரிய எளிமையான நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா வர வழிவகை செய்யப்படும்.

* ஜிஎஸ்டி வரி மூலம் இன்று ஒரே நாடு ஒரே வரி என்ற கனவும் நடைமுறைக்கு வந்துள்ளது.

* முத்தலாக் நடைமுறையை ஒழித்ததன் மூலம் முஸ்லிம் பெண்கள், சிறந்த வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* 2104- 19 காலகட்டத்தில், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. 2019-ல் இருந்து மக்களின் ஆசைகளையும் கனவுகளையும் நனவாக்குவோம்.

* ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியையும் வரவேற்கிறோம்; இவைதான் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் அச்சுறுத்தலாக இருந்தன.

* மக்கள்தொகைப் பெருக்கம், வருங்காலத் தலைமுறையினருக்கு புதிய சவால்களை ஏற்படுத்துகிறது. சிறிய குடும்பங்கள் சமூகத்தில் மரியாதையைப் பெறுகின்றன.

* அக்டோபர் 2-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கைத் தடை செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

* விரைவில் திறந்த வெளியில் மலம் கழிக்காத நாடாக இந்தியா மாறும்”.