முன்னேற்றத்தின் திசை

குளக்  கரையோரம்  பெரிய மரம்.  மரக்கிளையில் இரண்டு குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. ஒருநாள் அடித்த வேகமான காற்றில் அந்தக் குருவிகளின் கூடு பறந்து போய் விழுந்து விட்டது. இரை தேட சென்றிருந்த பறவைகள் திரும்பி வந்தன. கூட்டைக் காணவில்லை.  பெண் குருவி அழ ஆரம்பித்துவிட்டது. எனக்கு என்னுடைய வீடு வேண்டும் என்று கேட்டு அழுதது. ஆண் குருவி தாய்க் குருவிக்கு ஆறுதல் சொன்னது. ‘அழாதே, நாம் கட்டிய கூடு அருகில்தான் கிடக்கும். நாம் ஒன்று செய்யலாம், நம்முடைய அலகால் இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக இறைப்போம். இப்படி செய்தால் நீர் கொஞ்சம் வற்றிவிடும். நம்முடைய கூட்டை தேடிக் கண்டுபிடித்து விடலாம்”என்று ஆண் குருவி  சொன்னதும் உடனே பெண் குருவி அந்த யோசனையை ஏற்றுக் கொண்டது.

இரண்டு குருவிகளும் பல நாட்கள் தங்களுடைய அலகால் இறைத்த போதும் அந்தக் குருவிகளால் ஒரு வாளி தண்ணீரைக் கூட இறைக்க முடியவில்லை. ஆனாலும் அந்தக் குருவிகள் தங்களுடைய முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தன. அப்பொழுது அந்த குளக்கரைக்கு ஒரு முனிவர் வருகிறார். இந்த குருவிகளின் நடவடிக்கைளைப்  பார்க்கிறார். ‘குருவிகள் என்ன செய்கின்றன? குளத்திற்குச்சென்று மூழ்கி ஏதோ தேடுகின்றனவே இந்த குருவிகளுக்கும் குளத்திற்கும் சம்பந்தம் இல்லையே என்று யோசிக்கிறார். குருவிகளின் என்ன செய்கின்றன என்பதை தன்னுடைய ஞானதிருஷ்டியில் பார்க்கிறார்.

உடனடியாக அந்தக் குருவிகளுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறார். தன்னுடைய கைகளை மேலே உயர்த்தி குளத்து நீரை கொஞ்சம் தூரம் உள்வாங்கிச் செல்லும்படிபணிக்கிறார். சிறிது குளம் உள்வாங்கிக் கொண்டது. குருவிகள் உடனே தங்களுடைய கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கொண்டு வந்து அந்த கிளையில் வைத்து கட்டிக் கொண்டன.  இப்போது ஆண்  குருவி,  ‘‘நாம் முயற்சி செய்தோம், குளத்துத் தண்ணீர் குறைந்துவிட்டது. என்னுடைய யோசனை  ஜெயித்து விட்டது பார்த்தாயா?’’ என்று பெருமையாக கூறியது.ஜோடிக் குருவியும் அதை மகிழ்ச்சியாக ஆமோதித்தது.

இந்தக் குருவிகள் தங்களுடைய  கூட்டை இழந்த பிறகு வேறு எந்த முயற்சியும் செய்யாமல் வெறுமனே அழுதுகொண்டிருந்தால் அந்த காட்சியை முனிவர் பார்த்திருக்க மாட்டார். அவை முயற்சி செய்து கொண்டிருந்த, அதனாலேயே முனிவர் அந்தக் காட்சியைப் பார்க்க முடிந்தது. அந்த குருவிகளுக்கு உதவி செய்ய முடிந்தது.

நாமும் அப்படித்தான் ஒன்றை இழந்து விட்டோம் என்றால் அதை நினைத்து கவலைப்படாமல், அழுது கொண்டே இருக்காமல் அந்த இழப்பில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கடவுளின் கடைக்கண் பார்வைபடும்.

குருவிகளின் கதை சொல்வது இதுதான். முயற்சியே முன்னேற்றத்தின் திசை.