சட்டவிரோத போராட்டங்கள் தூண் தூணாக அசைத்துப் பார்க்கும் துரியோதனப் பட்டாளங்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், முஸ்லிம்களும் இணைந்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் இந்தச் சட்டத்துக்கு பொதுமக்களிடையே அபரிமித ஆதரவு இருப்பது தெரியவந்ததும், எதிர்க்கட்சிகள் போராட்டக் களத்திலிருந்து மெதுவாக விலகிக் கொண்டன. இருப்பினும் முஸ்லிம் மக்களைத் தூண்டிவிடும் செயல்களில் அவை தொடர்ந்து ஈடுபடுகின்றன.

டில்லி ஷாஹீன் பாக்      போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனால் 25 நிமிடங்களில் செல்ல வேண்டிய பயண தூரத்தைக் கடக்க  2 மணி நேரம் ஆனது. தினசரி 10,000 வாகனங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. டில்லி மாநில அரசும், மத்திய அரசும் போராட்டக்காரர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தைகள் பலனளிக்கவில்லை. மாறாக போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை மாற்றினர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான அந்தப் போராட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தேசிய மக்கள் தொகைப்பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றையும் எதிர்ப்பதாக திசைமாறியது.

இந்தப் போராட்டம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டும். சட்டத்தை எதிர்ப்பது முதல் தவறு, அதை விட அனுமதி பெறாத போராட்டம் நடத்தியது இரண்டாவது தவறு, இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச் செய்யும் வகையில் பொது சாலையைத் தடுத்தது மூன்றாவது தவறு, அரசு எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது நான்காவது தவறு. ஆனால் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நாட்டின் ஜனநாயகம் காக்கும் முதல் தூணான நாடாளுமன்றம் திட்டமிட்டு ஷாகின் பாகில் அவமதிக்கப்பட்டது.    ஜனநாயகத்தின்  இரண்டாவது தூணான அதிகார வர்க்கம், நிர்வாகம் என்ன சொல்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்தது. காவல்துறை வேடிக்கை பார்த்தது.

தொடரும் அட்டூழியங்களைப் பொறுக்க முடியாமல் டில்லி உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடுத்தனர். ஷாகின் பாக் பகுதியில் போராடுபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வழக்கு. ஆனால் டில்லி உயர் நீதிமன்றம் இதில் தலையிட மறுத்தது. இது வெறும் போக்குவரத்துப் பிரச்சினை என்று (ஜனவரி 12) தட்டிக் கழித்தது. பொதுமக்கள் கூடிப் போராடும் உரிமையைத் தடுக்க இயலாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கு டில்லி தேர்தலில் செல்வாக்கைச் செலுத்தலாம் என்பதால் டில்லி மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகே விசாரிக்க முடியும் என்றது உச்ச நீதிமன்றம் (பிப்ரவரி 7)

பிப்ரவரி 10ல் விசாரணை துவங்கிய போதும், தெளிவான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் போராட்டக்காரர்களின் துணிவு அதிகரித்தது. இன்னும் இந்த வழக்கு முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான நீதிமன்றத்தின் மீதும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

டில்லி ஷாகின்பாக் போராட்டம் அளித்த துணிவால் நாடு முழுவதும் பரவலாக பல இடங்களில் முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களை அமைத்தனர். முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் அனைத்து இடங்களிலும் பொது இடத்தில், காவல்துறை அனுமதி பெறாமல் தொடர் போராட்டங்கள் துவங்கின. தமிழகத்திலும் சுமார் 60 இடங்களில் இத்தகைய போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் சுமார் 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சந்தோஷ்,  கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு மார்ச் 5ல் விசாரணைக்கு வந்தது.

திருப்பூரில் அறிவொளி சாலை என்ற பிரதான சாலையில் அனுமதியின்றி தொடர் போராட்டம் நடத்தும் முஸ்லிம்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் கோபிநாத் தொடுத்த வழக்கின் விசாரணையின் நிறைவில், விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை, அவ்வாறு போராட்டம் நடத்த அனுமதித்தால் அது பேராபத்தை விளைவிக்கும், அந்தப் போராட்டக்காரர்களை உடனடியாக மாநில அரசு அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ( மார்ச் 5)

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டதை அடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னரும், அங்கு போராட்டம் நடத்த அனுமதிப்பது ஏன்? அவர்களை இன்னும் ஏன் அப்புறப்படுத்தவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பின. இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பரவாயில்லையே, நீதிமன்றத்துகேனும் முதுகெலும்பு உள்ளதே என்று நாட்டு மக்கள் ஆசுவாசம் அடைந்தனர். ஆனால், முஸ்லிம் அமைப்புகளின் வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் அறையிலேயே புகுந்து நடத்திய அத்துமீறல்களால் தாங்கள் அளித்த உத்தரவை நீதிபதிகளே நிறுத்தி வைத்தனர். மறுநாள் (மார்ச் 6) நடந்த வழக்கு மறு விசாரணையில் முஸ்லிம் அமைப்பினரின் கருத்துகளைக் கேட்ட பிறகே  தீர்ப்பு, தங்கள் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறி  மார்ச் 11ம் தேதிக்கு  வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் இவ்வாறு அசிங்கப்பட்ட நிலையில், நான்காவது தூணான பத்திரிகைகள், ஊடகங்களோ வாயில் கொழுக்கட்டை என்பது  போல அமைதி காக்கின்றனர். இந்த ஊடகங்கள் இதுவரை ஜனநாயக விரோதமான சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்டிக்கவில்லை. மாறாக முஸ்லிம்களைக் குழப்பி தூண்டிவிடும் வேலைகளில் தி இந்து, என்.டிடி.வி போன்ற நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

மொத்தத்தில் இந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் அரசுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதாக மாறி இருக்கிறது. போராட்டக் காரர்களோ ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பையே மையமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் உண்மையான எதிரியை நன்றாகவே தெரிந்திருக்கிறது.

சிஏஏ எதிர்ப்பாளர்களின் முழக்கங்கள் ஆர்.எஸ்.எஸ். மீதான வெறுப்பையும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான குரல்களையும் கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் போராட்டம் ஒருங்கிணைந்த இயக்கத்துக்கும் (ஆர்.எஸ்.எஸ்) ஒருங்கிணைந்த சமூகத்துக்கும் (முஸ்லிம்கள்) இடையிலானதாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஜிகாதி கும்பல்களும், வஹாபியிச ஆதரவாளர்களும், இடதுசாரி லிபரல்களும் இதன் பின்னணியில் இருந்துகொண்டு வெறுப்பை உமிழ்கிறார்கள். நாம் என்ன செய்யப்போகிறோம்? முஸ்லிம் மக்கள் ஜன நீரோட்டத்தில் இருந்து பிரிந்து செல்வதைத் தடுப்பது அவசியம். ஆர்.எஸ்.எஸ் குடும்ப அமைப்பான  ராஷ்ட்ரீய முஸ்லிம் மன்ச்   இந்தத் திசையில்தான் செயல்படுகிறது. இந்தப்பணிகள் மேலும் விரைவுபடுத்தப்பட வேண்டும்.