நீயல்லால் தெய்வம் இல்லை, முருகா! எங்கிருந்து எங்கே? அங்கிருந்து இங்கே!

ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம், ஸ்ரீ சுப்பிர மணிய புஜங்கம், கனகதாரா ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் பஜகோவிந்தம் ஆதித்ய ஹிருதயம், லட்சுமிநரசிம்ம கராவலம்பம், ஸ்ரீ மகா கணபதி சகஸ்ரநாமம், ஸ்ரீ சாஸ்தா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, ஹனுமான் சாலிசா… என்ன பட்டியல் இது என்று பார்க்கிறீர்களா? சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் நாவிலும் நெஞ்சிலும் நடம்புரியும் ஹிந்து துதி கீதங்கள்தான்! மொழி பெயர்த்தவர் பெயர் சண்முகம். அப்படிச் சொன்னால் சட்டென்று புரியாது. உளுந்தூர்பேட்டை சண்முகம் என்றால் பலருக்கும் திரைப்படப் பாடலாசிரியர் நினைவுக்கு வருவார்.

முகநூலில் யாரோ ஒருவர் ஈவேராவுடன் சண்முகம் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று கிடைத்ததாக சொல்லி சண்முகத்தின் வாழ்க்கைப் பாதை மாறிய விதத்தை வர்ணித்திருக்கிறார். பிள்ளையார் சிலைகளை உடைத்து வந்த ஈ வே ரா வுக்கு வலது கரமாக இருந்து உடைப்பு பணியில் ஈடுபட்ட அதே சண்முகம் இந்த உயரிய துதி கீதங்களை மக்களுக்காக தமிழ் ஆக்கித் தந்திருக்கிறார் என்கிறார் அந்த முகநூல் பதிவாளர்; நடுத்தர வயதை எட்டிய போது சண்முகத்திற்கு ஏற்பட்ட ஒருவித உடல் நலிவு காரணமாக அவருடைய நிலைமை கவலைக்கிடமான நிலையில் அவர் நாத்திகத்தை கைவிட்டு ஆத்திகர் ஆனது மட்டுமல்ல, மடைதிறந்த வெள்ளம் போல சமய நூல்களை தமிழாக்கம் செய்து வழங்கி விட்டுப் போயிருக்கிறார்! அது மட்டுமல்ல, ‘செக்கர்வானம்’ என்று ஒரு தேச பக்திப் பாடல்களின் தொகுப்பையும் 1971-ல் உளுந்தூர்பேட்டை சண்முகம் வெளியிட்டிருக்கிறார். இந்த புத்தகத்தை பாரத அரசு பதிப்பித்துள்ளது. திரைப்படப் பாடலாசிரியராக உளுந்தூர்பேட்டை சண்முகம், அகஸ்தியர், திருமலை தென்குமரி, ராஜராஜசோழன் போன்ற பல படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட வேண்டும். இவரது வெங்கடேச சுப்ரபாதம் தமிழ் மொழிபெயர்ப்பு, பாம்பே சகோதரிகள் குரலில் ஒலிப் பேழை வெளிவந்து 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது! ஒரு காலத்தில் ஈ.வே.ராவுடன் பிள்ளையார் சிலைகளை உடைத்துக் கொண்டிருந்த இவர் இயற்றிய ‘‘விநாயகனே வினை தீர்ப்பவனே” என்ற பாடல் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் ஒலிக்காமல் எந்த ஊரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது சொல்லுங்கள்! உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் இன்னும் சில பாடல்கள் உங்கள் கவனத்திற்கு: நீயல்லால் தெய்வமில்லை, முருகா; திருப்பதி மலை வாழும் வெங்கடேசா; மதுரை அர சாளும் மீனாட்சி எல்லாமே தமிழகத்தை பக்திப் பரவசத்தால் வியாபித்த பாடல்கள். (தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை துணை இயக்குநராக பணி யாற்றிய உளுந்தூர் பேட்டை சண்முகம் தமிழ் எம்.ஏ.; எம்.லிட், பி.ஹெச்.டி, என்பது கூடுதல் தகவல்).

விஜயபாரதம் படிப்பவர்களில் தி.க.வின் கி. வீரமணி உண்டு. திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து இடம் பெற வேண்டாமா?