மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

பொருள்: ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்று உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் மற்ற பெண்கள் கேட்கிறார்கள். உடனே, உறங்கிக் கொண்டிருந்த பெண், அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய மற்ற எல்லாத் தோழிகளும் இங்கே ஆஜர் ஆகிவிட்டனரா? என்றாள்.

எழுப்ப வந்தவர் களோ, “”அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் நாங்கள் எண்ணவேண்டும். அதன்பின்பு அவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையைச் சொல்கிறோம்.இப்பொழுது, அவர்களை நாங்கள் எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்ற கணக்கை வந்து பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் எண்ணிக்கை இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு,”என்று கேலி செய்தனர்.

இறை சிந்தனை வளர்த்து அவனது ஈடு இணையற்ற கழலடிகளைப் பற்ற “நான் முந்தி, நீ முந்தி” எனப் போட்டி போட வேண்டும். அதுவே பக்தி. அதுவே வாழ்வின் முறை. தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் உன்னத நிலைதனை உறுதியுடன் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு, “அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போலவே அவனைப் போல் தியானம் செய்தால் இறையருள் சாத்யமா? இன்னொருவன் லட்ச லட்சமாய் பணச்செலவு செய்வதால் அருள் கிடைத்துவிடுமா? என்று திக்குத் தெரியாத யோசனைகளை செய்து கொண்டிருப்பதால் எந்தப் பலனுமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.