திருப்பாவை – பாசுரம் 4

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்ந்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து

தாழாதே சாரங்கம் தொடுத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்.

மழையானது எப்படிப் பொழிகிறது என்பதை எடுத்துரைக்கும் பாடல் இது. மழை பெய்யும் நிகழ்வுகளை இறைவனோடு ஒப்பிட்டுக் கூறும் இப்பாடலில் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் நடைமுறையைக் கண்டூ நாம் வியக்கலாம்.

பாவையர் நோன்பு நிமித்தம் குடி மக்கள் நலன் கருதியும், மார்கழி நீராடலுக்காகவும் எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி பாவையரை மகிழ்ச்சியடையச் செய்ய மழை வேண்டிக் கேட்டுக்கொண்ட பாடல் இது.

சமுத்திர மணல் தெரியுமாறு வஞ்சிக்காமல் நீரை முழுவதும் முகர்ந்தெடுத்து உறிஞ்சி கருமேகங்களாக்கி மழை பொழிய வேண்டுவது (ஒன்று நீ கைகரவேல்) அப்பெண்கள் காட்டும் ஆர்வத்தைக் குறிக்கிறது.

“பத்மநாபனின் கையிலுள்ள சக்கரம் போல் மின்னலொடும், சங்கு போல் முழங்கும் பலத்த இடியுடனும், வெற்றியை மட்டுமே ஈட்டும் இராமபிரானது சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் இலக்கைச் சரியாக அடைகிற தோல்விகாணா அம்புகளைப் போல் மழை பொழிவாயாக !! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம்” என்பதன் மூலம் அப்பெண்களின் உறுதியான நிலைப்பாட்டினை ஆண்டாள் முன்னிருத்துகிறாள்.

ஆர்.கே.