கோவா சுதந்திர தினம்

சுதந்திரத்துக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் உட்பட பல பகுதிகள் பாரதத்துடன் இணைந்தன. ஆனால், கோவா 1961லும், புதுச்சேரி 1963லும்தான் இணைந்தது. டமன், டையூ, தாத்ரா நகர்ஹவேலி, கோவா, போன்றவை 451 வருடங்கள் போர்ச்சுகீசியர்கள் வசம் இருந்தன.

1950ல் பாரதம் போர்ச்சுக்கல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், எவ்வித பலனும் இல்லை. கோவாவை விட்டுத்தர முடியாது என்றது போர்ச்சுக்கல். ஜம்மு காஷ்மீரை பாரதத்துடன் இணைப்பதில் தீவிரம் காட்டிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இவற்றை மீட்பதிலும் ஆர்வம் காட்டியது. இதற்கு, முதலில் குரல் கொடுத்தவர் டாக்டர் ராம் மனோகர் லோஹியா. பின், நேஷனல் மூவ்மென்ட் பார் லிபரேஷன் ஆர்கனைசேஷன் (NMLO), ஆசாத் கோமண்டக்  தள் (AGD) என்ற பெயர்களில் போராட்டக்குழு துவங்கப்பட்டது. மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

1954ல் புனே நகர ஆர்.எஸ்.எஸ். தலைவரான விநாயக்ராவ் ஆப்டே தலைமையில் 100 ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் தாத்ரா-நகர் ஹவேலியை முற்றுகை யிட்டனர். இதில் 175 போர்ச்சுக்கீசிய சிப்பாய்கள் சரணடைந்தனர். அங்கு பாரத தேசத்தின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பாரதத்துடன் இணைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ், கோவாவை பாரதத்துடன் இணைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. வழக்கம் போல் நேரு கண்டுகொள்ளவில்லை. கோவாவை விடுவிக்க, போராட்டக் குழு சத்யாகிரகம் செய்தது. இதில் அதிகமான எண்ணிக்கையில் ஆர்.எஸ்.எஸ். ஜனசங்க தொண்டர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்தும் இதில் கலந்து கொண்டனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். கண்மூடித்தனமான தாக்குதல், துப்பாக்கி சூடு நடைபெற்றது. 30 பேர் உயிரிழந்தனர். இப்படி, ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களால் மீட்கப்பட்ட கோவாவின் விடுதலை திட்டமிட்டு வரலாற்று ஏடுகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

உண்மையான வரலாற்றை எடுத்துச் சொல்வோம், பெருமிதம் கொள்வோம்.