மயானமாக தொடர வேண்டும் கபர்ஸ்தானாக மாற்றக்கூடாது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஹிந்துக்களுக்கு ஒதுக்கிய அரசு நிலம் மயானமாக தொடர வேண்டும். இஸ்லாமியர்களுக்கான ‘கபர்ஸ்தா’னாக மாற்றம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி தங்கப்பன் தாக்கல் செய்த மனு: பொன்னமராவதி மேற்கு கிராமத்தில் ஒரு கூரைவீடு, அருகிலுள்ள நிலத்தை 15 ஆண்டுகளுக்கு முன் கிரையம் வாங்கினேன். அது அரசு புறம்போக்கு நிலம். எனக்கு பட்டா வழங்கவில்லை. தண்டவரி எனக்கு கிரையம் கொடுத்தவர் அனுபவத்தில் இருந்தபோது வசூலிக்கப்பட்டது. நான் கிரையம் பெற்றபின் அந்நடைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டது. தொட்டியம்பட்டி ஊராட்சியில் மயானம் இல்லை என்பதற்காக எனது அனுபவ நிலத்தின் மூலையில் எரிமேடை, தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதை மயானத்திற்குரிய நிலமாக அரசு வகை மாற்றம் செய்தது. ஹிந்துக்கள் மயானமாக பயன்படுத்தும் நிலத்தில் இஸ்லாமியர்களுக்கான கல்லறைத் தோட்டம் (கபர்ஸ்தான்) அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இதனால் பிரச்னைகள் ஏற்படவாய்ப்புள்ளது.

நான் அனுபவித்து வருவது ஆக்கிரமிப்பு நிலம்; அதை காலி செய்ய வேண்டும் என பொன்னமராவதி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். உறுதிஅளித்தபடி எனக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரை எனக்கு இடையூறுஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: அரசின் நடவடிக்கையில் தலையிட விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட நிலம் மயானமாக தொடர வேண்டும். கபர்ஸ்தானாக மாற்ற நிலத்தை மறுவரையறை செய்யக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டார்.