‘2023 — 24ல் விவசாய கடன் ரூ.20 லட்சம் கோடியை தாண்டியது’

கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட முறை சார் கடனின் அளவு அதிகரித்துள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி மாதம் வரை இத்துறைக்கு 20.39 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டில் வேளாண் துறைக்கு 20 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் இந்த இலக்கை ஏற்கனவே எட்டிவிட்டன.

நடப்பு நிதியாண்டில் விவசாயத் துறைக்கு வழங்கப்படும் கடனின் அளவு 22 லட்சம் கோடி ரூபாயை தாண்டக்கூடும். குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற நோக்கில், குறுகிய கால பயிர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கடன்களுக்கான வட்டியை 7 சதவீதமாக வேளாண் அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

மேலும், சரியான நேரத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு, 3 சதவீதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகளிடமிருந்து மொத்தம் 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளம் சார்ந்த விவசாயிகளுக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி மாத இறுதி வரை 12.68 கோடி கணக்குகளுக்கு, 20.39 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுவே, கடந்த நிதியாண்டிலும், 18.50 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 21.55 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 7.34 கோடி கிசான் கிரெடிட் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. மொத்தம் 8.85 லட்சம் கோடி ரூபாய் இதன் வாயிலாக கடனாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல், 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 2.81 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2019ம் ஆண்டில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் மூன்று தவணையாக செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.