மனம் மாறியது

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பல துறவிகள் சென்னையில் பின்தங்கியப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் சென்று, ஆசி வழங்கினர். இதனை கண்ணுற்ற ஒரு சமூக சேவகர் தன்னுடைய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

துறவிகளின் வருகையை கேள்விப்பட்டதும் மக்கள் உற்சாகமடைந்தனர். ஒவ்வொரு பகுதியும் விழாக்கோலம் பூண்டது. மக்கள் தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி, சுவாமிகளின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். பின்னர் சுவாமிகள் அவருக்கு பூர்ணகும்ப மரியாதை அளித்து, மேள தாளம் முழங்க தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

சன்யாசிகளும் அவர்கள் விஜயம் செய்த பகுதியிலுள்ள அனைத்து மக்களின் இல்லங்களுக்கும் சென்று விளக்கேற்றி, இந்த வருடம் சிறப்பாக அமைய ஆசிர்வதித்தனர். மக்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தனர்.

பிள்ளைப்பேறு வேண்டி:  சென்னை மெரினா கடற்கரை அருகிலுள்ள ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மாட்டான்குப்பம் பகுதிக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தர் பீடத்தின் சுவாமிகள் வருகை புரிந்து மக்களை சந்தித்தார்.

சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்னிடம் வந்து, ஐயா, இது சுவாமிஜி கொடுத்த எலுமிச்சம் பழம். இதை என் மகளுக்கும் மருமகனுக்கு கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?” என்று தவிப்புடன் கேட்டார். விரிவாக அவரிடம் விசாரித்ததில் எனக்கு தெரிய வந்த விஷயம்: அவர் மகளுக்குத் திருமணம் முடிந்து 18 வருடங்கள் கடந்த பின்பும் வருந்திய இந்தக் குடும்பத்திற்கு, ஆறுதல் கூறுவதுபோல் வந்த சில பெண்களும் பாதிரிகளும் ஜபம் செய்தால் குழந்தை பிறக்கும் என ஆசை வார்த்தை கூறி சர்ச்சுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு பாதிரிகள் தொடர்ந்து ஜபம் செய்து, இக்குடும்பத்தையே கிறிஸ்தவ மயமாக்கியுள்ளார்கள். ஆனால் இன்றுவரை குழந்தை பாக்கியம் மட்டும் கிட்டவில்லை. இவற்றை எல்லாம் சொன்ன பிறகு, அந்தப் பெண்மணி கண்ணிருடன், என் தெய்வம் பழனியம்மனை நான் இத்தனை நாட்களாக மறந்துவிட்டேன். ஆனால் இனிமேல் மறக்க மாட்டேன் . சுவாமிஜியிடமும் இதுபற்றி சத்தியம் செய்துள்ளேன்” என்றார்.

பின்னர் நான் அவர்களிடம் இனிமேல் நீங்கள் சர்ச்சுக்குப் போக வேண்டாம். உங்கள் குலதெய்வம் பழனியம்மனை முறையாக வணங்குங்கள். சுவாமிகளின் இந்த எலுமிச்சம் பழத்தை நம்பிக்கையோடு உங்கள் மகளிடம் கொடுங்கள். நல்லதே நடக்கும்” எனக்கூறி அனுப்பி வைத்தேன்.

பிள்ளை நலன் வேண்டி: ஒரு அம்மா கையில் தனது பத்து வயது குழந்தையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தார். கண்ணீர் மல்க சுவாமிஜியிடம், மனவளர்ச்சி குன்றிய தன் மகனுக்கு ஆசி வழங்குமாறு வேண்டினார். சுவாமிஜியும் அக்குழந்தையின் நெற்றியில் கனிவுடன் விபூதி பூசி, கவலையுடன் நின்ற அந்தத் தாய்க்கும் நம்பிக்கை அளித்து அனுப்பினார்.

நம் மண்ணின் மைந்தர்கள் துறவிகள் மீது மட்டற்ற மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டபோது மெய்சிலிர்த்தது.