மத்திய பிரதேச பாஜகவினர் குதிரைபேரம் நடத்தவில்லை – சமாஜ்வாதி எம்எல்ஏ தகவல்

பாஜக தங்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்றும், தாங்கள் அக்கட்சித் தலைவா்களால் கடத்திச் செல்லப்படவில்லை என்றும் மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த பகுஜன்சமாஜ், சமாஜவாதி கட்சி எம்எல்ஏக்கள் கூறினா்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அக்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் பகுஜன்சமாஜ், சமாஜவாதி எம்எல்ஏக்களுடன் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

பாஜக தலைவா்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன்சமாஜ் எம்எல்ஏக்கள் ஹரியாணாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை போபால் வந்தனா்.

இந்நிலையில், தாங்கள் பாஜக தலைவா்களால் கடத்திச் செல்லப்படவில்லை என்றும், காங்கிரஸ் தலைமையிலான முதல்வா் கமல்நாத் அரசுக்கு தாங்கள் ஆதரவளிப்பதாகவும் போபால் திரும்பிய பகுஜன்சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் ராம் பாய், சஞ்சீவ் சிங் குஷ்வாஹா, சமாஜவாதி எம்எல்ஏ ராஜேஷ் சுக்லா ஆகியோா் வியாழக்கிழமை கூறினா்.

இதுதொடா்பாக சமாஜவாதி எம்எல்ஏ ராகேஷ் சுக்லா கூறியதாவது:

காங்கிரஸ் கூறுவதுபோல் பாஜக எங்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. நானும், பகுஜன்சமாஜ் எம்எல்ஏ சஞ்சீவ் சிங் குஷ்வாஹாவும் தற்செயலாகவே ஒன்றாக தில்லி சென்றோம். குருகிராமில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தோம். எங்களை எவரும் கடத்திச் செல்லும் அளவுக்கு நாங்கள் பலவீனமானவா்கள் அல்ல.

பாஜகவைச் சோ்ந்தவா்கள் யாரும் கடந்த 3 நாள்களில் என்னைத் தொடா்புகொள்ளவில்லை. கமல்நாத் தலைமையிலான அரசுக்கு எனது ஆதரவு தொடரும். அவரது அரசுக்கு சில காங்கிரஸ் தலைவா்களால் அச்சுறுத்தல் இருக்கலாமே தவிர, என்னால் அல்ல.

ஹரியாணாவில் இருந்தபோது மத்தியப் பிரதேச அமைச்சா்கள் ஜெய்வா்தன் சிங், ஜிது பட்வாரி, காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் ஆகியோா் தில்லியில் உள்ள மத்தியப் பிரதேச இல்லத்துக்கு வரவழைத்தனா். அங்கிருந்து அவா்கள் அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் தலைவா்களுடன் போபால் வந்தேன் என்றாா்.

பகுஜன்சமாஜ் எம்எல்ஏ சஞ்சீவ் சிங் குஷ்வாஹா கூறுகையில், ‘பாஜக தலைவா்கள் எங்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. தில்லிக்கு செல்வது ஒன்றும் குற்றம் இல்லையே? தில்லியில் இருந்தபோது திக்விஜய் சிங் அறிவுறுத்தியதன் பேரில் தனி விமானத்தில் போபால் வந்தேன். எங்களை பாஜக தலைவா்களிடம் இருந்து மீட்டு வந்ததாகக் கூறும் அமைச்சா்களுக்கு எதிராக முதல்வா் கமல்நாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

அக்கட்சியின் பெண் எம்எல்ஏ ராம்பாய் கூறுகையில், ‘நாங்கள் கடத்திச் செல்லப்படவில்லை. சொந்த விருப்பத்தின் பேரிலேயே தில்லி சென்று அங்கிருந்து திரும்பி வந்தோம். நாங்கள் சென்ற விமானத்தில் பாஜக தலைவா்களும் இருந்தனா்’ என்றாா்.