மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து உள்ளூர் திட்ட குழுமம் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை குமார் 2011 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச் சுவரிலிருந்து 1 கி.மீ., சுற்றளவில் 9 மீ., உயரத்திற்கு மேல், விதிகளை மீறி பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை கோயில் கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ளன. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் அமர்வு விசாரித்தது. மாநகராட்சி கமிஷனர் தரப்பு: மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் 1 கி.மீ.,சுற்றளவில் 9 மீ.,உயரத்திற்கு மேல் கட்டுமானம் கட்டக்கூடாது என 1997 ஜன.,30 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இக்கோயில் கோபுரங்களை சுற்றிலும் அவற்றை மறைக்கும் வகையில் 9 மீ., உயரத்திற்கு மேல் 547 கட்டடங்கள் கட்டப்படுள்ளதாக ஏற்கனவே ஆய்வு செய்த வழக்கறிஞர் கமிஷனர் குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. ஜன.,31 ல் விசாரணையின்போது இதுபோல் 1000 கட்டடங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. 9 மீ., உயரத்திற்கு மேல் உள்ளவை, அனுமதியற்ற கட்டுமானங்கள், விதிமீறல் கட்டடங்கள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் கடமை தவறிய, தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதத்தில் 9 கட்டடங்களை பூட்டி சீல் வைத்துள்ளோம். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள்: 1997 ஜன.,30 க்கு பின் கட்டுமான அனுமதி கொடுக்கப்பட்ட கட்டடங்கள், அவற்றில் அனுமதித்ததை விட விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொண்ட கட்டடங்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை குறித்து உள்ளூர் திட்டக் குழுமம் ஏப்.,4 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.