கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்க ஜெய்சங்கர் வலியுறுத்தல்

“கனடாவில் உள்ள நமது தூதரக அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது: அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் எங்களுடைய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என நம்புகிறோம். எங்களுடைய தூதர்களை கனடாவில் மிரட்டிய நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிபார்க்கிறோம்.

கடந்த மார்ச் 19ம் தேதி காலிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். கனடாவில் எங்களுடைய தூதர்கள் பணிக்கு பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் காணப்பட்டது. கனடா அரசிடம் இருந்து சிறிய அளவிலேயே ஆதரவு கிடைத்தது. கனடாவில் இந்திய தூதரகங்கள் மீது புகை குண்டுகள் வீச கூடிய அளவுக்கு உள்ளது. பேச்சு சுதந்திரம், ஜனநாயகம் உள்ளது என்று கூறிவிட்டு, பணியை செய்து வரும் தூதர்களை அச்சுறுத்துவது என்பது தவறான விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.