கடலோர காவல் படையில் பெண்களுக்கு நிரந்தர பணி: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

‘கடலோர காவல் படையில் பெண்களுக்கு நிரந்தர பணி நியமனத்தை அரசு வழங்கவில்லை எனில், நீதிமன்றம் வழங்கும்’ என, உச்ச நீதிமன்றம் நேற்று கடுமையுடன் தெரிவித்தது. ராணுவம், விமானப்படை, கடற்படையில், நிரந்தர பணி நியமனம் மற்றும் குறுகிய கால பணி நியமனங்கள் வழங்கப்படுகின்றன. நிரந்தர பணி நியமனம் வாயிலாக பணியில் சேருவோர், ஓய்வு பெறும் வயது வரை பணியில் தொடரலாம். ஏற்க முடியாது

குறுகிய கால பணி நியமனத்தில் சேருவோர், ஐந்து, 10 அல்லது 14 ஆண்டுகள் என, குறுகிய காலம் மட்டுமே பணியாற்ற முடியும். ‘பெண்களுக்கு முப்படைகளில் நிரந்தர பணி நியமனம் வழங்கப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இந்திய கடலோர காவல் படையில், குறுகிய கால பணியில் சேவை புரிந்த தகுதியுடைய பெண்களுக்கு, நிரந்தர பணி நியமனம் வழங்க வேண்டும் எனக்கோரி, பிரியங்கா தியாகி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி வாதிடுகையில், ”இந்திய கடலோர காவல் படையில் குறுகிய கால பணியில் உள்ள பெண்களுக்கு நிரந்தர பணி நியமனம் வழங்குவதில் சில செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளன. இவற்றை களைய கடலோர காவல் படை சார்பில் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார். இதை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியதாவது:

செயல்பாட்டு சிக்கல்கள் என்பது போன்ற சாக்கு போக்குகளை, 2024ல் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களை அவ்வளவு சாதாரணமாக நீங்கள் ஒதுக்கிவிட முடியாது. நீங்கள் அமைத்துள்ள வாரியத்தில் பெண்களும் இடம் பெறும்படி செய்யுங்கள். பெண் சக்தி பற்றி பேசும் நீங்கள், அதை இங்கு நடைமுறைபடுத்தி காட்ட வேண்டியது தானே. முப்படைகளில் பெண்கள் நியாயமாக நடத்தப்படும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். நீங்கள் இன்னும் ஆணாதிக்க மனோபாவத்துடன் உள்ளீர்கள். கடற்படையில் பெண்களுக்கு நிரந்தர பணி நியமனம் வழங்கப்படும் போது, கடலோர காவல் படையில் வழங்காதது ஏன்.

முப்படைகளில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தும் அவை நிறைவேற்றப்படவில்லை.
கடலோர காவல் படையில் பெண்களுக்கு நீங்கள் நிரந்தர பணி வழங்கவில்லை எனில் நீதிமன்றம் தலையிட்டு வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது. வழக்கு விசாரணை மார்ச் 1ம் தேதி தொடர்கிறது.