மக்களே என் குடும்பம்: இந்தியர்களுக்காகவே வாழ்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

”மக்களே என் குடும்பம்; இந்தியர்களுக்காகவே வாழ்கிறேன், எனக்காக அல்ல” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சியினர் தேர்தல் பற்றியே பேசுகின்றனர். ஆனால், நாங்கள் தேச வளர்ச்சியை பற்றியே சிந்திக்கிறோம். நேற்றைக்கு கூட அனைத்து அமைச்சர்கள், மூத்த செயலாளர்கள், அதிகாரிகள் என சுமார் 125 பேருடன் ஆலோசனையில் ஈடுபட்டேன். அப்போது தேர்தலை பற்றி விவாதிக்கவில்லை, வளர்ச்சியடைந்த பாரதம் தொடர்பாக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தே விவாதிக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு பா.ஜ., உறுதியாக உள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் இரண்டு ஐஐடி.,கள், மூன்று ஐஐஎம்.,கள், ஒரு ஐஐஎஸ் மற்றும் ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகும், தெலுங்கானா மக்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. 2014க்குப் பிறகு, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தெலுங்கானா வளர்ச்சிக்கும், பழங்குடியின மக்களின் கவுரவத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

பழங்குடியினப் பெண் நாட்டின் ஜனாதிபதி ஆவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? பிர்சா முண்டாவின் பிறந்தநாள் தேசிய விழாவாக கொண்டாடப்படுமா? பழங்குடியினரின் வளர்ச்சிக்காக பா.ஜ., அரசு தனி அமைச்சகத்தை உருவாக்கியது. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நம் தேச மக்களே என் குடும்பம்; இந்தியர்களுக்காகவே வாழ்கிறேன், எனக்காக அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.