தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி பெற அதிக தொழில் முனைவோர் தேவை: சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கருத்து

தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி பெறுவதற்கு அதிகளவு தொழில் முனைவோர் உருவாக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார். சென்னை ஐஐடி சார்பில் ‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களையும் பொதுமக்கள் பார்வையிடவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தவும் சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, ஐஐடி புத்தாக்க மையம் சார்பிலான கண்காட்சி கடந்த 2 நாட்களாக (மார்ச் 2, 3) நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை தொழில் வல்லுநர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் காட்சிப்படுத்தி, அதன்சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்தனர். குறிப்பாக, சோலார்கார், மருந்துகளை விநியோகிக்கும்ட்ரோன் என 76 விதமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, ‘‘நம்நாட்டில் அடுத்த தலைமுறைக்கான கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் புத்தாக்க மையம் மாற்றத்தை ஏற்படுத்தும். 2047-ம்ஆண்டு தொழில்நுட்பத்தில் இந்தியா வல்லரசாக உருவெடுப்பதற்கு அதிக அளவிலான தொழில் முனைவோர் தேவைப்படுகின்றனர்.

அதற்கு ஏராளமான, புதுமையான சிந்தனைகள் தேவைப்படுகின்றன. எங்கள் மாணவர்கள் பலரை தொழில்முனைவோராக உருவாக்கும் பொறுப்பை புத்தாக்க மையம் ஏற்றுக்கொண்டுள்ளது. 2025-ல் பட்டதாரிகளாக தேர்ச்சி பெறும் மாணவர்களில் 20சதவீதம் பேர், வேலைவாய்ப்பின்முதல் நாளிலேயே தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக தேர்வாக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு’’ என்று தெரிவித்தார்.