மக்களுக்கும் சேர்த்துதான் கோரிக்கைகளை முன்வைத்தோம்; தேவைப்பட்டால் மீண்டும் வேலைநிறுத்தம்: சிஐடியு தொழிற்சங்கம்

உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில், தேவைப்பட்டால் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளடக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைமையிலான தொழிற்சங்கங்களும் நேற்று முன்தினம் முதல் தீவிர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் வேலைநிறுத்தம் நீடித்தது.
இதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் போக்குவரத்து பணிமனை, பேருந்து நிலையங்களில் முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தையும் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தன. இதன்ஒருபகுதியாக சென்னை, பல்லவன் சாலையிலும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே நேற்று காலை முதலே மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்து, 99 சதவீத பேருந்துகள் இயங்குவதாக தெரிவித்தார். மாநிலம் முழுவதும் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிற்பகலில் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று, வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. பின்னர் செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது:
வரும் 19-ம் தேதிக்குப் பிறகான பேச்சுவார்த்தையில் தற்போதைய கோரிக்கைகளையே வலியுறுத்துவோம். உடன்பாடு ஏற்படாவிட்டால் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற அமைதியான வழியில் போராட்டத்தைத் தொடர்வோம். தேவைப்பட்டால் மீண்டும் வேலைநிறுத்தமும் நடைபெறும். ஏனெனில் ரூ.2 ஆயிரம் கூட தர மறுப்பதால், அரசின் கொள்கையில் மாற்றம் வந்துவிட்டதோ என கருத வேண்டியிருக்கிறது. அகவிலைப்படி வழங்குவதை நிறுத்த வேண்டும் என அரசு நினைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்தல் போன்றவற்றில் இருந்து கொள்கை மாற்றம் தெரிகிறது.
வேலைநிறுத்தத்தில் சிஐடியு வன்முறையில் ஈடுபடவில்லை. ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர்தான் எங்களது நிர்வாகிகளை தாக்கினர். சட்டவிரோதமாக ஆள் எடுத்து, விபத்துகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது கோரிக்கையில் இருக்கிறது. தற்போது இருக்கும் பேருந்துகளைக் கூட போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களால் மட்டுமே இயக்க முடியும்.
அண்ணா தொழிற்சங்கத்தினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை. அதிமுகவுடன் இணைந்ததாகக் கூறி, மக்களை குழப்பினர். 6 கோரிக்கைகளை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மக்களுக்கும் சேர்த்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு தான் அவப்பெயர் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன் கூறியதாவது: ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் தர தயாராக இல்லாத அரசு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய பணப்பலனை எப்படி கொடுக்கும் என தெரியவில்லை.
தொழிலாளர்களுக்கு என்ன நடந்தாலும் பணம் கொடுக்க மாட்டேன் என அரசு பிடிவாதமாக இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனினும் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு வரும் 19-ம் தேதி வரை வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்கிறோம். அதற்குள் நல்லதொரு முடிவை அரசு எடுக்க வேண்டும். அதன் பின்னரும் தீர்வு ஏற்படாவிட்டால் ஜன.20-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடரும். இதில் சங்க பேதமின்றி பெருவாரியான தொழிலாளர்களும் நிச்சயம் பங்கெடுப்பார்கள். இவ்வாறு கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில், “தற்காலிகமாக வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்கிறோம். 19-ம் தேதி பேச்சுவார்த்தையின் முடிவைப் பொருத்து போராட்டம் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.