மக்கள் மருந்தகங்களால் ஏழைகளின் ரூ.26,000 கோடி சேமிப்பு: அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

கூட்டுறவுத் துறை தொடர்பான மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: முதன்மை வேளாண்மை கடன்சங்கங்கள் (பிஏசிஎஸ்) சார்பில், மக்கள் மருந்தகங்களை திறக்கஅனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இதன்படி கடந்த 6 மாதங்களில் மட்டும்பிஏசிஎஸ் சார்பில் மக்கள் மருந்தகங்களை திறக்க 4,470 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இதில் 2,373 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
வெளிச் சந்தையை ஒப்பிடும்போது மக்கள் மருந்தகங்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் ஏழைகளின் ரூ.26,000 கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் நகரங்களில் மட்டுமே செயல்பட்ட மக்கள் மருந்தகங்கள் தற்போது கிராமங்களிலும் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 10,500-க்கும் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. இந்த மருந்தகங்களில் 1,965-க்கும் மேற்பட்ட உயர்தர மருந்துகள், 293-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம், ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், டிஜிட்டல் சுகாதார திட்டம், மலேரியா ஒழிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2 லட்சம் பிஏசிஎஸ் சங்கங்கள் தொடங்கப்படும். ஒவ்வொரு கிராம மக்களும் பலன் அடைவர் என்றார்.