புனித விருட்சத்தை வசைபாடும் புல்லுருவிக் கூட்டம்

தமிழகத்தில் சில பிரிவினைவாத, தேச விரோத இயக்கங்கள் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸை காலூன்ற அனுமதிக்க மாட்டோம் என்று பேசியும் எழுதியும் வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்ஸை காலூன்ற அனுமதிக்க மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்? இனிமேல்தான் யாராவது வந்து ஆர்.எஸ்.எஸ்ஸை துவக்க இருப்பது போலவும் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பது போலவும் பேசுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் 1940ல் துவங்கியது. தற்போது சுமார் 1,800 ஊர்களில் அன்றாடப் பயிற்சி வகுப்புகள் (ஷாகாக்கள்) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முழு நேர ஊழியர்களாகியுள்ளனர்; பல்லாயிரம் அன்பர்கள் சங்கப்பணியை முனைப்புடன் பரப்பி வருகின்றனர்.

ஒருகாலத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்தினார்.  சேலத்தில் திராவிடர் கழகத்தினர் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினர். இன்று அதே தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான  ஊர்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து ஊக்கம் பெற்ற ஹிந்து முன்னணி ஜாம் ஜாம் என்று நடத்திக் கொண்டிருக்கிறது. தி.க.வினர் சபரிமலை யாத்திரை செல்வதை கிண்டலும் கேலியும் செய்தனர். ஆனால் இன்று சபரிமலைக்கு மாலை போடாத பக்தர்கள் இல்லாத ஒரு கிராமத்தைச் சொல்ல முடியுமா? ‘தமிழகம் ஏதோ ராமசாமி நாயக்கர் மண்ணு, அண்ணா மண்ணு’ என்பது போன்ற பாடாவதி முழக்கங்கள் இனி எடுபடாது.

தமிழகம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறந்த பூமி. வள்ளுவரும் கம்பரும் வள்ளலாரும் ராமானுஜரும் ரமணரும் அவதரித்த பூமி. கம்பராமாயணமும், திருக்குறளும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தமும் ஓங்கி ஒலித்துவரும் மண் தமிழகம். இந்தப் புனித பூமியில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றுவது என்ன, வேரூன்றி தழைத்து, விழுதுவிட்டு, படர்ந்து வியாபித்தாயிற்று!