பசு பாதுகாப்பே புத்திசாலித்தனம்!

அரசியல் சாஸனத்தின் பிரிவுகள் மக்களை பாதுகாப்பதற்குதான் உள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் வன விலங்குகளையும் கூட காப்பதுதானே அரசின் கடமை? பசுவதை தடைச்சட்டம் மக்களின் உணவை, ஆரோக்கியத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான். அதனை அனைவரும் வரவேற்கவேண்டும். சில முஸ்லிம் மதத் தலைவர்கள், பசுமாமிசம் சாப்பிடவேண்டும் என்று குரானில் சொல்லப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். பசுவதை தடையை சில முஸ்லிம் அரசர்கள் கூட பின்பற்றியுள்ளனர். சில நாடுகளில் சில மிருகங்களை உணவுக்காக கொல்வதை தடை செய்துள்ளனர். நமது பாரம்பரிய பெருமையை, வேளாண்மையை அழிக்க, மெக்காலே வகுத்த கல்வி முறையில் படித்தவர்கள்  தூண்டிவிடுகின்ற செயல்தான் பசுவதைத் தடைக்கு எதிரான போராட்டம். பசு, பாரத தேசத்தின் வளமையைக் காக்கும் தேசிய விலங்கு. அதை நாம் பாதுகாக்க வேண்டும்.

இயற்கை உரமும் உணவு உற்பத்தியும்

செயற்கை உரங்களைப் பயன்படுத்தி பூச்சி மருந்துகளை தெளித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிற விஷ உணவுகளை உற்பத்தி செய்யாமல், இயற்கை உரம் பயன்படுத்தி பூச்சிகளினால் பாதிக்கப்படாத பயிர்களை வளர்த்து, பலமடங்கு தானிய உற்பத்தி செய்த வெற்றிகரமான விவசாயிகள் பலர் உள்ளனர். மண் மலடு ஆகாமல் காக்கவும் மலடான மண்ணை மீட்டெடுக்கவும் இயற்கை வேளாண்மை தேவை. அதற்கு பசுவும் காளையும் இருந்தால்தான் சாத்தியமாகும்.

பசு உரம்

நம் பசுவினம் மட்டும்தான் மண்ணை வளமாக்கி வருகிறது. இன்று மண்புழு உரம் என்று  பெரிதாக சொல்கிறார்களே, அதற்கு பசு சாணம், கோமியம்தான் தேவை. இதர விலங்கினங்களின் சாணங்களுக்கு அத்தன்மை இல்லை.

மேலும், மாட்டைக் கொண்டு உழும்போது மண் மென்மையாகிறது. கலப்பையின் கொழு அரையடி ஆழம் உழுகிறது. டிராக்டர் போன்ற சாதனங்கள் நிலத்தை ஆழமாக தோண்டுவதால் மண்புழுக்கள் கொல்லப்படுகின்றன. பசுவினத்தின் சாணம் கோமியம் போன்றவை மண்புழுவைக் காக்கிறது, பயிரை செழுமையாக வளர்க்கிறது, சுற்றுச்சூழல் கெடுவதில்லை. ஆரோக்கிய உணவு உற்பத்தியாகி மானுடத்தை வாழவைக்கிறது.

பசு தெய்வமா?

நம்மிடம் எதையும் கேட்டுப் பெறவேண்டும் என்ற நிலை தெய்வங்களுக்கு இல்லை. ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்கிறாள். அரிசியின் தவிடு, வைக்கோல், காய்கறிக் கழிவுகள், கழுநீர் ஆகியவற்றை பசுவினம் உணவாக ஏற்றுக்கொண்டு நம் மானுடம் வாழ அமிர்தமயமான பாலைத் தருகிறது, ஆகையினால் பசு தெய்வம்தான்.

பசும்பாலின் சிறப்பு

வெளுத்தது எல்லாம் பால் அல்ல என்று தமிழகத்தில் பழமொழி சொல்வார்கள். எருமைப் பால் உடல் பலம் தரும். அதில் கொலஸ்ட்ரால் உள்ளதால் வியாதிகளையும் தரும். மந்தபுத்தி ஏற்படும். சுறுசுறுப்பு குறையும். ஆடு, மூலிகை தாவர உணவுகளை உண்பதால் அதன் பால் உடைந்த எலும்பையும் சரிசெய்யும் தன்மை அதற்கு உண்டு. குழந்தையின் பால் பற்கள் விழும் வரை தாய்ப்பால் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.  பெண்கள் அழகு போய்விடும் என்பதால் தாய்ப்பால் தருவதை தற்போது நிறுத்திவிடுகிறார்கள். அதனால் தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்று, நம் பசுவின் பால் மட்டுமே. பசுவின் பாலில் தங்கபஸ்பம் உள்ளதால் அது இளமஞ்சள் நிறத்தில் உள்ளது. இது கொழுப்பில்லாத தாய்ப்பாலுக்கு நிகரானது. பசும்பால் ஜீரண சக்தியை தரும். குழந்தை சுறுசுறுப்பாகவும் இருக்கும். பசுவும் கன்றும் போலவே பெற்றோரிடம் பாசத்துடன் இருப்பார்கள். அதனால் பசுவின் பாலே நாம் அனைவரும் அருந்தும் நல் உணவு.

பசுவினம் தரும் வருமானம்

நமக்கு நான்கு மாதாக்கள் உண்டு. ஒன்று கங்கா மாதா, இரண்டாவது பூமாதா, மூன்றாவது பெற்ற தாய்மாதா, நான்கு கோமாதா. பாரத தேசத்தின் 40% பிரதேசத்தை கங்கை செழிப்பாக்குகிறது. குடிக்கத் தண்ணீர் தருகிறது. விவசாயிகளை காக்கிறது. பூமாதா தண்ணீர், காற்று, பயிர், உணவு ஆகியவற்றை உயிரினம் காக்க அளிக்கிறது. நம்மை பெற்ற தாய் இல்லையெனில் நாம் இல்லை. தன்னை தியாகம் செய்து நமக்காக அனைத்தையும் அளிப்பவள் ஜனனியாகிய மாதா. கோமாதா நம்மையெல்லாம் வாழவைக்கும் சுத்தமான அமிர்தமயமான பாலைத் தருகின்ற மாதா. இந்த கோமாதா மூலமாக அதனுடைய கழிவுகளைக் கொண்டு பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும்.

நமது கலாச்சாரம் ஜீரோ பட்ஜெட் கலாச்சாரம். பஞ்சகவ்யம் மூலம் பயிர்களை வளமாக வளர்க்க முடியும். அதனுடைய கோமியம் அல்லது அதன் தயாரிப்பான ‘அர்க்’கை அன்றாடம் சிறிதளவு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் புளிப்பு ஏப்பம், மலச்சிக்கல், மஞ்சக்காமாலை, சளி, இருமல், காய்ச்சல், மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, கண்நோய், மூலநோய், தோல்நோய் ஆகியவை குணமாகும். பஞ்சகவ்யம் தயாரித்து விற்க முடியும். அர்க் மூலம் மருந்து தயாரிக்கமுடியும். ஊதுபத்தியும் தயாரிக்கலாம். வரட்டி தயாரித்து அதிக அளவில் விற்க முடியும். இன்று ஆன்லைன் வர்த்தகத்தில்  பொருள்களில் பசுவரட்டியும் ஒன்று. ரசாயனம் கலவாத சோப்பு, பல்பொடி, விபூதி, பினாயில்,  சமையலுக்கு கோபர்கேஸ், மண்புழு உரம், பூச்சி விரட்டி ஆகியவையும் தயாரித்து விற்பனை செய்ய இயலும். மீத்தேன் கேஸ் உருவாக்கி வாகனங்களைக் கூட ஓட்ட முடியும். மாட்டைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும். வருமானம் அதிகரிக்கும். இளைஞர்கள் பலர் ஏற்றுமதி செய்தும் நிறைய சம்பாதிக்கிறார்கள். பசுவினத்தை காத்து வளர்ப்பதால் நமக்கு எந்தவிதமான சுமையும் இல்லை.

மக்களை நேசிக்கும் நமது பிரதமர் நரேந்திர மோடி  தன் வீட்டைப் பற்றி கவலைப்படாமல் நாட்டை நேசிப்பவர். பாரத தேசத்தின் 130 கோடி மக்களையும் நேசிக்கிறார். அவர் எந்த விஷயம் செய்தாலும் பேசினாலும் தேச மக்களுக்காகவேதான் செய்கிறார். பசு அழிந்தால், 130 கோடி மக்களும் அழிவார்கள். இயற்கையான ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க பசுக்களால்தான் இயலும் என்பதால் மோடி தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்களும் ஆரோக்கியமாக வாழ மகிழ்ச்சியாக இருக்க இயற்கையை போற்ற பசுவினத்தை காக்க இந்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளார். தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம். சில குழப்பவாதிகள் அதிகமாக கூச்சலிடுகிறார்கள். தமிழக மக்களின் ஆதரவு என்றும் மோடிக்கு உண்டு. சுயநலமற்ற மோடியின் கொள்கைகளுக்கு என்றும் தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

(கட்டுரையாளர்

வட தமிழக கோசேவா பிரமுக்)