தீண்டாமை ஒழிப்பாளர்களின் திருட்டு முகம்!

தங்களுக்கு எதிரானவர்கள் ஆட்சி பீடத்தில் இருந்தால், எங்கோ ஒரு மூலையில் நடக்கும் மாணவர் மோதல்களைக் கூட உசுப்பேற்றி தலித் மக்களைப் பீதியடைய வைக்கும் கம்யூனிஸ்டுகளின் வேடம் அவ்வப்போது கலைந்து விடுவதுண்டு. சமீபத்திய உதாரணம், கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள முதலமடை ஊராட்சி.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் கிராமத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற தலித் அருந்ததியின மக்கள் வசிக்கிறார்கள். உள்ளூர் ஜாதி பிரச்சினையால், அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. ஊரை விட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.

கேரள அரசு வழங்கும் இலவச வீடுகள் அருந்ததியின மக்களுக்கு இல்லை. அவர்களின் வீடுகளைப் புனரமைக்கவும் உதவவில்லை. இங்குள்ள குடிநீர் தொட்டியில் தலித் மக்களுக்கென்று தனி குழா. தேநீர் விடுதிகளில் இரட்டைக் குவளை முறை அமலில் உள்ளது.

மேல் ஜாதியினரின் இந்த அடக்குமுறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற நிர்வாகிகளும் ஆதரவு. தலித்துக்கள் அடக்குமுறைக்கு எதிராகக் கொதித்தெழுந்தால், ஆட்சியாளர்கள் ஆபாசமாகத் திட்டி, தாக்க முற்படுவார்கள். இதற்கு எதிராக கிராம மக்கள் முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்த மக்கள் தற்போது ஊரில் இருந்து ஒதுக்கப்பட்டு, அங்குள்ள மதுரை வீரன் கோயிலில் வசித்து வருகிறார்கள். சில சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசோ மௌனம் சாதிக்கிறது. ஊருக்கு மட்டுமே உபதேசம் அளிப்பதே இவர்களது கொள்கையோ?