பி-12 குறைபாட்டைக் களைய பொட்டலமே போ, சத்துணவே வா!

மனிதவள மேம்பாட்டில் இளந் தலைமுறையினரின் ஆற்றலை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆனால் துரதிருஷ்டவசமாக இளந்தலைமுறையினர், ஆற்றல்ரீதியாக செம்மையாக உள்ளனர் என்று கூறமுடியவில்லை. பல்வேறு குறைபாடுகள். இதற்கு உணவுப் பழக்கமும் ஒரு முக்கிய காரணம். ஜங்க் புட் எனப்படும் பாக்கெட் உணவு நுகர்வு மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வது இதுதான்.

பி-12, மனிதர்களின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் மன நிலைக்கும் இன்றியமையாதது. பி-12 குறைபாடு இளந்தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது. தேசத்தின் தலைநகரான டெல்லியில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களில் 34 சதவீதத்தினரும் இளம் பெண்களில் 30 சதவீதத்தினரும் இத்தகைய குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இயல்பான எடை கொண்டோரில் 28 சதவீதத்தினரிடமும் மிகை எடை கொண்டோரில் 40 அதிமிக எடை கொண்டோரில் 51 சதவீதத்தினரிடமும் பி-12 குறைபாடு உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் குறைபாட்டை களைய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட நபர்கள் இருதய நோய்க்கு ஆளாக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் நரம்புத் தளர்ச்சி போன்றவற்றுக்கும் அவர்கள் இலக்காகக் கூடும்.

பி-12 குறைபாட்டை களைய என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மீன், முட்டை, குறிப்பிட்ட சிலவகை இறைச்சிகள் போன்றவற்றில் பி-12 சத்து அபரிமிதமாகக் காணப்படுகிறது. அசைவ உணவு உண்பவர்கள் இவற்றை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் பி-12 சத்து குறைபாட்டிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

சைவ உணவு சாப்பிடுபவர்கள் பருப்பு வகைகள், கொட்டைகள், கீரைகள், பாதாம், பிஸ்தா போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்த பி12 குறைபாட்டிலிருந்து விடுபட முடியும். மீன் எண்ணெய் போன்றவற்றை உட்கொள்ளவும் வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிகமாக சாப்பிடுகிறவர்கள், உணவுக்காக அதிக அளவு செலவு செய்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் சரியான சீரான உணவை சாப்பிடுகிறார்களா என்பதுதான் கேள்வி. தேவையானவற்றை சாப்பிடாமலும் தேவையற்றவற்றை வரைமுறை இன்றி சாப்பிடுவதாலும்தான் இத்தகைய பிரச்சினை ஏற்படுகிறது. ஆரோக்கியமான நொறுக்குத் தீனியை உட்கொள்வதன் மூலம் குப்பை உணவுகளை ஓரங்கட்ட முடியும். இதுபற்றிய விழிப்புணர்வை மேல்நிலை, கல்லூரி மாணவ மாணவிகளிடையே ஏற்படுத்துவது இன்றியமையாதது.