பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு கொடுக்கும் காங்கிரஸ் – மாயாவதி

காஷ்மீருக்கு சென்றதன் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு காங்., வாய்ப்பு கொடுத்துள்ளது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

ஆக.,5 ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அசு ரத்து செய்தது. இதனையடுத்து காஷ்மீரில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து தற்போது காஷ்மீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருந்தும் சில பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடப்பதால், பதற்றமான பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆக., 24 அன்று, காஷ்மீர் கவர்னரின் எச்சரிக்கையை மீறி அங்கு சென்றனர். அவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் காஷ்மீர் பயணம் குறித்து மாயாவதி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், காங்.,க்கு இப்படி செய்வது புதிதல்ல. அனுமதியின்றி காஷ்மீருக்கு சென்று, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வாய்ப்பு கொடுத்து விட்டன. காஷ்மீர் கவர்னரும் இதை அரசியலாக்க பார்க்கிறார். காஷ்மீரில் நிலை சரியாக கொஞ்ச காலம் ஆகும். யதார்த்த நிலையை புரிந்து கொண்டு எதிர்க்கட்சிகள் காத்திருக்க வேண்டும். அது தான் கோர்ட்டிலும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். நீண்ட கால கோரிக்கையான 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதை அடுத்து சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசின் முடிவால் காஷ்மீர் மக்கள் நலத்திட்டங்களை பெறுவர் என பகுஜன் சமாஜ் நம்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.