காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாடு தலையீடு கூடாது, அதிபர் டிரம்புடன் நடத்திய பேச்சில் பிரதமர் மோடி திட்டவட்டம்

”ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுக்கு தீர்வு காண, மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையே இல்லை; இரு நாடுகளுமே, இந்த பிரச்னையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வோம்,” என, பிரதமர் மோடி, திட்டவட்டமாக கூறினார்.

அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் முன்னிலையே, பிரதமர் இந்த கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார். இதையடுத்து, ”காஷ்மீர் பிரச்னைக்கு, சம்பந்தபட்ட இரு நாடுகளுமே, சுமுகமாக பேசி தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது,” என, டிரம்பும் தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது.இதற்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விஷயத்தில், ஐ.நா.,வையும், உலக நாடுகளையும், இந்தியாவுக்கு எதிராக திருப்ப, முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து, காஷ்மீர் விஷயத்தில், அமெரிக்காவை, இந்தியாவுக்கு எதிராக துாண்டி விடவும், பாக்., முயற்சித்தது. இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது. ‘காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண, மத்தியஸ்தம் அவசியம்’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப், கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரான்சின், பியாரிட்ஸ் நகரில், ‘ஜி – 7’ எனப்படும், பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது. இதில், டிரம்ப் பங்கேற்ற நிலையில், பிரதமர் மோடியும், சிறப்பு அழைப் பாளராக பங்கேற்றார். அந்த மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்-வுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில், ஜி – 7 மாநாடு நடந்த அரங்கின் ஒரு பகுதியில், பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் நேற்று சந்தித்து பேசினர்.

கடந்த, 1947க்கு முன், இந்தியாவும், பாகிஸ்தானும், ஒரே நாடாகவே இருந்தன. எங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை, நாங்களே சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வோம். இதில், மூன்றாவது நாட்டின் தலையீடுக்கோ, மத்தியஸ்தத்துக்கோ, அவசியமே இல்லை. பாக்., பிரதமர் இம்ரான் கான், தேர்தலில் வெற்றி பெற்றதும், அவருடன் போனில் பேசினேன். அப்போது, ‘இரு நாடுகளுமே, வறுமை, கல்வியறிவின்மை, நோய்கள் போன்ற விஷயங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. ‘எனவே, இரு நாடுகளும் இணைந்து, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த வேண்டும்’ என, கூறினேன்.இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதை, நாங்களே சுமுகமாக பேசி தீர்ப்போம். மூன்றாம் நாட்டின் தலையீடுக்கு அவசியம் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடியுடன் பேசினேன். அப்போது, காஷ்மீரில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக, அவர் கூறினார். இந்த பிரச்னைக்கு, சம்பந்தபட்ட இரு நாடுகளுமே சுமுகமாக பேசி, நல்ல தீர்வை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.மோடி, இம்ரான் கான் ஆகிய இருவருடனும், எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர்கள், பிரச்னைக்கு தீர்வு காண்பர் என, நம்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண, மூன்றாம் நாட்டின் தலையீடு அவசியம் இல்லை என, நேற்றைய பேட்டியின் போது, பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பும், அதை ஏற்று உள்ளதால், காஷ்மீர் விவகாரத்தை வைத்து குளிர் காய நினைத்த, பாகிஸ்தான், ஏமாற்றம் அடைந்துஉள்ளது.