பாரதிய மயமானாள் பாதிரி மகள்!

அந்நிய நாட்டிலிருந்து வந்து நம் நாட்டிற்குச் சேவை செய்த பெண்மணிகள் பலர். அவர்களுள் பெரும்பாலோர் தாங்கள் அன்னியர் என்ற அடையாளத்துடனேயே சேவை செய்தனர். ஆனால் அயர்லாந்தில் பிறந்து, சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகச் சக்தியால் ஈர்க்கப்பட்டு, சொல், சிந்தனை, செயல் ஆகிய அனைத்திலும் தான் ஒரு பாரதப் புதல்வியே என்று நிறைவாக வாழ்ந்தவர் சகோதரி நிவேதிதை.

 

ஒரு முறை பாதிரி சாமுவேலைக் காண அவரது நண்பர் ஒருவர் அவரது இல்லத்திற்கு வந்தார். அவர் பல ஆண்டுகள் இந்தியாவில் மதபோதனை செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பி இருந்தார். வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த மார்கரெட்டைப் பார்த்தார் அந்த நண்பர். அவளது முகத்தில் தென்பட்ட சிரத்தை அவரைக் கவர்ந்தது. தன் நண்பரின் புதல்வியான அவளிடம், மார்கரெட், இந்தியா தனது தெய்வத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறது. அங்கு தொண்டாற்ற நீ ஒரு நாள் அழைக்கப்படலாம், தயாராக இரு” என்று கூறினார். அவர் கூறியதைக் கவனித்த மார்கரெட், அவர் சென்ற பின் தன் பெற்றோரிடம் இந்தியாவைக் காட்டுமாறு அடம் பிடித்தாள். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நாட்டை எப்படிக் காட்டுவது! அவளது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட சாமுவேல், அட்லஸில் இந்தியாவைக் காட்டினார். மார்கரெட் தன் பிஞ்சு விரல்களால் இந்தியாவை மீண்டும் மீண்டும் தடவிப் பார்த்தாள்; இந்தியாவிற்கே சென்றதைப் போலப் பரவசம் அடைந்தாள். அன்று முழுவதும், ‘இந்தியா! இந்தியா!’ என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். உறங்கச் செல்லும்முன் இந்தியப் பணிக்குத் தன்மை அர்ப்பணிப்பதாக இறைவனிடம் பிரார்த்தனை செய்தபடியே உறங்கிப் போனாள். ஆம்! பாரதம் அவளை அழைத்தது. ஆனால் தந்தையின் நண்பரைப் போன்று இந்தியர்களை மதமாற்றம் செய்யவும் அவர்களைத் தங்களது தாய்நாட்டை மறக்கச் செய்யவும் அவள் அங்கு செல்லவில்லை! பாரதத்தின் புதல்வர்களைத் தங்களது மாத்ரு பூமியை ‘வந்தே மாதரம்’ என்று வணங்க வைக்கவும் அவர்களுடன் தானும் வணங்கவுமே வந்தாள்!

****************

நிவேதிதை கொல்கத்தாவில் உணர்ச்சி மிக்க ஐந்து சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவற்றிலும் அவர் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். தம்மை வரவேற்றுப் பல நூற்றாண்டுகளாக வாழ இடம் கொடுத்து வரும் தேசத்திற்குத் தமது கடமையை ஆற்ற வேண்டும்; இந்திய முஸ்லிம்கள் ஹிந்துக்களுடன் சமுதாய ரீதியாக ஒற்றுமை பாராட்ட வேண்டும் என்றார் சகோதரி நிவேதிதை. ‘ஆசியாவில் இஸ்லாம்’ என்ற உரையில் நிவேதிதை, இந்திய முஸ்லிம்களின் கடமை இப்போது என்ன? அரேபியாவுடன் தங்களை இணைத்துக் கொள்வதல்ல. தங்களை வரவேற்று வாழ இடம் தந்த இந்தியாவுடன் தங்களை இணைத்துக் கொள்வதே” என்று கூறினார்.

****************

உலகிற்கு மனிதனின் தெய்வீகத்தைப் பறைசாற்றிய சுவாமி விவேகானந்தர் நவம்பர் 1895ல் லண்டன் வந்து சேர்ந்தார். அங்கு அவரது சொற்பொழிவுகளை மார்கரெட் தவறாமல் கேட்டார். அவரது வேதாந்த முழக்கம் மார்கரெட்டின் இதயத்தில் தியாகக் கனலை மூட்டியது. சொற்பொழிவின் முடிவில் மார்கரெட் எழுப்பிய கேள்விகளுக்கு சுவாமிஜியிடமிருந்து மிகுந்த வலிமையுடன் பதில்கள் வந்தன. ஒரு கட்டத்தில் அவர், இப்போது உலகின் தேவையெல்லாம், அதோ அந்தத் தெருவில் நின்றபடி, கடவுளைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறக்கூடிய ஆடவரும் மகளிருமான இருபது இளைஞர்கள்தான். யார் முன் வருகிறீர்கள்?” என்றார். தனது இருக்கையிலிருந்து எழுந்த சுவாமிஜி, கூட்டத்தினரை ஒவ்வொருவராகப் பார்த்தார். யாராவது தன்னோடு சேரமாட்டார்களா என்று கேட்பதுபோல் இருந்தது அவரது பாவனை. அவர் மேலும் தொடர்ந்தார்: ஏன் அஞ்சவேண்டும்? இது உண்மை என்றால் வேறு எதைப் பொருட்படுத்த வேண்டும்? உண்மை இல்லை என்றால் நம் வாழ்க்கையின் பொருள்தான் என்ன? சுயநலமற்ற, பேரன்பு மயமான வாழ்க்கை உடையவர்களே உலகிற்குத் தேவை. மகாத்மாக்களே! எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! உலகம் துன்பத் தீயில் வெந்து கொண்டிருக்கிறது. உறங்க முடிகிறதா உங்களால்?” மார்கரெட்டால் உறங்க முடியவில்லை. தனக்காகவே வந்த தெய்வீக அழைப்பு அது என்று அவரது உள்ளுணர்வு கூறியது. பாரதத்திற்கு வந்து சுவாமிஜியின் சிஷ்யையாக அவரது சேவைப் பணிகளில் தன்னை அர்ப்பணிப்பது என்று அவர் முடிவெடுத்தார்.

****************

காசியில் 1905ல்  நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற இளைஞரான சுப்ரமணிய பாரதியார், மாநாடு முடிந்து திரும்பும் போது கொல்கத்தாவில் நிவேதிதையைச் சந்தித்தார். நாட்டின் நன்மைக்காக வெள்ளைத்தோல் கொண்ட மேற்கத்தியவர்களை ஒழித்துக் கட்டவும் தயாராக இருக்கும் அஞ்சாத தீரர் வேண்டும் என்றார் அவர். நிவேதிதை கூறியபடி மனைவியை மதிப்புடன் நடத்துவதாகவும் வாக்களித்தார். ‘மதித்து அவளுக்குக் கல்வி கற்பிக்க முற்பட்டால், அவளும் ஆர்வத்துடன் கற்பதைக் காண்பாய்’ என்றார் நிவேதிதை. அந்தச் சந்திப்பிற்குப் பிறகே, பாரதியார் பெண் விடுதலை பற்றி உணர்ச்சி மிக்க பாடல்களை இயற்றினார். அதோடு பொதுநலத்தையும் பெண்களின் உயர்வையும் கருத்தில் கொண்டு, நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக ‘சக்ரவர்த்தினி’ என்ற இதழின் ஆசிரியரானார். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்றெல்லாம் அக்னிப் பிழம்பு போன்ற கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். ஊருக்கு உபதேசமாக நின்றுவிடாமல், தனது மனைவியைப் பராசக்தியின் வடிவம் என்று போற்றத் தொடங்கினார்.

****************

ஆசிரமத்துக் கிளி ‘ரங்கா, ரங்கா’ என்றதாம். கசாப்புக் கடையில் வளர்ந்த கிளியோ ‘வெட்டு, வெட்டு’ என்றதாம். நிவேதிதையின் மாணவியர் ஆசிரமத்துக் கிளிகள். ‘வந்தே மாதரம்’ என்ற தேசிய மந்திரத்தை அவர்கள் ஓதினர்; ‘ஸத்யமேவ ஜயதே, தர்மமே வெல்லும்’ என்று பாடினர்; பாரதமாதா உயிருள்ள தெய்வீக சக்தி என்பதை உணர்ந்தனர். பாரதமாதாவிற்குப் பாடுபடுவது நற்பேறு என்பதைப் புரிந்துகொண்டனர்.

**********

சுதந்திரப் போரில் வீரமரணம் அடைந்த வீரமங்கை ஜான்சி ராணி லட்சுமிபாயின் உறவினரான மாதாஜி கங்கபாய் ‘மகாகாளி பாடசாலை’ என்ற பெயரில் ஏழை ஹிந்துப் பெண்களுக்காக ஒரு பள்ளியை கொல்கத்தாவில் நடத்தினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யை கௌரிமா, ‘ஸ்ரீசாரதேசுவரி ஆசிரமம்’ என்ற பெயரில் சந்நியாசினிகளுக்காக ஒரு மடம் தொடங்கி, பெண்கள் பள்ளி ஒன்றும் நடத்தி வந்தார். அவை இரண்டும் பெண்களுக்காக ஹிந்து வழிமுறைகள் மற்றும் லட்சியத்துடன் நடத்தப்பட்டன. எனவே, நிவேதிதை அவற்றைப் பார்வையிட்டிருந்தார்.

**********

மார்கரெட்  ஜனவரி 1898ல் கொல்கத்தா வந்து சேர்ந்தார். அந்தச் சமயம் ஸ்டார் தியேட்டர் அரங்கத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற இருந்தது. அதில் இந்தியர்களுக்கு மார்கரெட்டை அறிமுகம் செய்து. தமது தலைமை உரையில் சுவாமிஜி பின்வருமாறு பேசினார்: நமது பணியில் உதவ இங்கிலாந்து பல நன்கொடைகளை அளித்துள்ளது. அவற்றில் முக்கியமானவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். அவரிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். அவர் இப்போது உங்களிடையே பேசுவார்.” இவ்வாறு ரத்தினச் சுருக்கமாக அறிமுகம் செய்து விட்டு மார்கரெட் தன்னைத் தானே அறிமுகம் செய்து கொள்ளும்படி விட்டுவிட்டார் சுவாமிஜி. அவரும் அதைச் சிறப்பாகச் செய்து முடித்தார். திரளாகக் கூடியிருந்த மக்களிடையே பேச எழுந்தார் மார்கரெட். அச்சம் ஏதும் இல்லாமல் தனது கருத்தைத் தெளிவாக எடுத்துரைத்தார் அவர். பாரதத் திருநாட்டின்மீது தான் கொண்டிருந்த மரியாதையையும் அதற்குச் சேவை செய்ய விரும்புவதையும் எடுத்துரைத்தார். அவரது உரையின் ஒரு பகுதி பின்வருமாறு: இந்தியர்களாகிய நீங்கள் உங்கள் கலாச்சாரத்தை ஆறாயிரம் வருடங்களாக மிகவும் உறுதியாகப் பின்பற்றியவர்கள்; அதைச் சிறிதும் மாறாமல் பாதுகாத்து வருகிறீர்கள். அதனாலேயே, மகோன்னதமான ஆன்மீகச் செல்வங்களை உலகிற்காக உங்களால் நீண்ட காலம் கட்டிக் காக்க முடிந்தது. எனவேதான், பாரதத் திருநாட்டிற்குச் சேவை செய்ய ஆர்வமாக நான் இங்கே வந்துள்ளேன். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வெற்றி!” இவ்வாறு தனது உரையை மார்கரெட் நிறைவு செய்தபோது பலத்த கரகோஷமும், ஆரவாரமும் எழுந்தன. அவை கொல்கத்தா மக்களின் மகிழ்ச்சியையும் மார்கரெட்டுக்கு அவர்கள் அளித்த வரவேற்பையும் தெரிவித்தன.

**********

இல்லத்தைத் துறந்து இந்தியா வந்த மார்கரெட்டுக்கு பிரம்மச்சரிய தீட்சை வழங்க முடிவு செய்தார் சுவாமிஜி.  மார்ச் 2, 1898 அன்று சுவாமிஜி மார்கரெட்டுக்கு ஞான தீட்சை வழங்கினார். முந்தைய நாள் முழுவதும் உண்ணாவிரதமும் மௌனவிரதமும் இருந்து, அன்று காலையில் மடத்திற்கு வந்தார் மார்கரெட். உடன் அவரது தோழிகளும் சுவாமிஜியின் அமெரிக்கச் சிஷ்யைகளுமான ஜோசஃபைன் மெக்லவுட்,  சாராபுல் ஆகியோரும் வந்தனர். சுவாமிஜி முதலில் மார்கரெட்டுக்கு சிவபூஜை செய்யக் கற்றுக் கொடுத்தார். பின்னர் அவர் வேள்வித் தீயின்முன் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார். ஹோம குண்டத்தின் முன் அமர்ந்திருந்த சிஷ்யை தன் மனதில் ஞானவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டதை உணர்ந்தார். நிஷ்டை கலைந்த சுவாமிஜி, சிஷ்யையின் நெற்றியில் ஹோம ரட்சையைத் திருநீறு போன்று பூசினார். புதிய ஞானப் பிறப்பு எடுத்ததன் அடையாளமாக, ‘நிவேதிதை’ என்ற தீட்சை நாமம் வழங்கினார். கடவுளுக்குப் படைக்கப்படும் படையல் நிவேதனம் எனப்படும். பாரதத் தாயின் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் நிவேதிதை என்ற பொருத்தமான  பெயரை அளித்தார் சுவாமிஜி.

**********

நவம்பர் 14, 1898 அன்று மூன்று பெண்களுடன் பள்ளி தொடங்கியது. குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வர ஒரு பணிப்பெண் அமர்த்தப்பட்டார். பாக்பஜாரில் இருந்த வீடுகளுக்கு நிவேதிதை தானே நேரில் சென்று, பள்ளிக்குப் பெண்களை அனுப்புமாறு பெற்றோர்களை வேண்டினார். அவர்களுக்கு நிவேதிதை அளித்த ஒரே உத்தரவாதம், ‘அஞ்ச வேண்டாம்! உங்கள் பெண்களை உங்களது ஆசாரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றிலிருந்து மாற்ற மாட்டோம். மாறாக, அவற்றில் பிடிப்பை வலுப்படுத்துவோம். பள்ளியில் ராமாயண, மகாபாரதம் சொல்வோம்’ என்பதுதான். பின்னல், தையல் போன்ற வேலைகளும் கற்றுத் தருவோம். வங்க மொழி, கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவையும் கற்றுக் கொடுப்போம்’ என்று கூறி அவர்களுக்கு உற்சாகமூட்டி ஒத்துழைக்கச் செய்தார் நிவேதிதை. பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்தது. (படத்தில் நிவேதிதை சிருஷ்டித்த பாரதக் கொடி)

**********

தென்னகம் நிவேதிதையைப் பேச அழைத்தது. அவர், டிசம்பர் 19, 1902 அன்று சென்னை வந்து சேர்ந்தார். நவம்பர் 20, 1902 அன்று, ஹிந்து இளைஞர்கள் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பச்சையப்பர் மன்றத்தில் நிவேதிதையின் முதல் சொற்பொழிவு நடந்தது. அங்கு கூடிய பெரும் கூட்டத்தின் முன், ‘இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை, அவரது உரைகளிலேயே சிறந்த ஒன்றாக அமைந்தது. மலிவான தபால் முறை, ரயில் போக்குவரத்து, ஆங்கிலத்தைப் பொதுமொழி ஆக்கியது போன்ற பிரிட்டிஷ் அரசின் முயற்சிகளால்தான் பாரதத்திற்கு ஒருமைப்பாடு ஏற்பட்டது என்று பிரிட்டிஷ் அரசு இந்தியர்களை நம்ப வைத்திருந்தது. பரவலான, ஆனால் பொய்யான அந்த நம்பிக்கைக்கு மாறாக, உண்மையை நிவேதிதை உறுதியாக எடுத்துரைத்தார். நடுப்பகலில் வானத்தில் சூரியனைப் பார்ப்பது போல், பாரதத்தை இணைக்கும் ஒற்றுமையை நான் நேரடியாகக் காண்கிறேன். நம்மிடையே நிலவுவது ஒரு பெரும் ஒருங்கிணைக்கும் சக்தி! ஈடிணையற்ற சக்தி! வலிமையும் கம்பீரமும் பொலியும் சக்தி! ஆற்றல்கள் பலவற்றைத் தன்னுள் கொண்டிருக்கும் சக்தி! அதை நாம் அனைவரும் அறிந்துகொண்டு, அதன் அடிப்படையில், அதன் வலிமையில் செயல்படும் நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன்.

நமது தேசிய தர்மம் மீண்டும் நிலை நாட்டப்படும் நாள் வந்தே தீரும். அப்போது நாடு முழுமையும் ஒன்றாக இணைந்திருக்கும்.”

**********

தாம் இந்தியாவில் வாழ்ந்த 13 குறுகிய ஆண்டுகளில் (1898-1911) பாரத தேசத்தில் பெண் கல்வி, அரசியல் சுதந்திரம், சுதேசிய பொருளாதாரம், பாரத பாரம்பரியக் கலையின் மறுமலர்ச்சி, இந்திய அறிவியல் என்று நம் பாரத தேசிய வாழ்வின் முக்கியமான துறைகள் அனைத்திற்கும் புத்துயிர் ஊட்டினார் சகோதரி நிவேதிதை. 1911 அக்டோபர் 13, 1911 அன்று ஆன்மா மெதுவாகப் பிரிந்து நித்தியத்தில் கலந்தது! அப்போது நிவேதிதைக்கு நாற்பது நான்கு வயது நிறைவடைய பதினைந்து நாட்கள் இருந்தன! அவரது இறுதிச் சடங்குகள் அவர் விரும்பியபடியே ஹிந்து முறைப்படி நடந்தேறின. ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பிரம்மச்சாரி ஒருவர் அவரது பொன்னுடலுக்கு எரியூட்டினார். அந்த இடத்தில் அழகிய நினைவாலயம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அதில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் இதோ:

‘பாரதத்திற்காகத் தனது அனைத்தையும் அளித்த சகோதரி நிவேதிதை இங்கு உறைகிறார்!’