நவம்பர் 1 : தினத்தந்தி பவள விழா: பாமரரும் படிக்க விரும்பும் நாளிதழ்!

 

ஜனநாயகத்தின் முதலாவது தூணாக நாடாளுமன்றம் கருதப்படுகிறது. நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை மற்ற தூண்கள்.

காட்சி ஊடகம், சமூக ஊடகம் போன்றவற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதிலும் அச்சு ஊடகத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை என்பதை புள்ளி விவரம் மெய்ப்பிக்கிறது.

அமோகமாக விற்பனையாகும் 10 இந்திய நாளிதழ்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் நாளிதழ், தினத்தந்தி தான், தினந்தோறும் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள்.  ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாசகர்கள்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோயில், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, துபாய் ஆகிய 17 நகரங்களில் தினத்தந்தி அச்சிடப்படுகிறது. வேறு எந்த தமிழ் நாளிதழும் இவ்வளவு அதிக மையங்களில் அச்சிடப்படவில்லை.

ஹிந்தியில் வெளிவரும் ‘தைனிக் ஜாகரண்’ நாளிதழ் 39 லட்சம் பிரதிகளும் ஆங்கிலத்தில் வெளிவரும் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ 32 லட்சம் பிரதிகளும் மலையாளத்தில் வெளிவரும் ‘மலையாள மனோரமா’ 25 லட்சம் பிரதிகளும் தெலுங்கில் வெளிவரும் ‘ஈநாடு’ 19 லட்சம் பிரதிகளும் விற்பனையாகின்றன.

1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாரத சுதந்திரப் போராட்டமும் கொதிநிலையை எட்டத்தொடங்கியது. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை எதிர்கொண்டது. இந்நிலையில் 1942ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று தினத்தந்தி நாளிதழை சி.பா. ஆதித்தனார் தொடங்கினார். முதலில் மதுரையில் மட்டுமே தினத்தந்தி வெளிவந்தது.

போர் நடைபெற்று வந்ததால் பத்திரிகை காகிதம் போதுமான அளவு கிடைக்கவில்லை. இந்த பிரச்சினையை சி.பா. ஆதித்தனார் சமயோசிதத்துடன் சமாளித்தார். வைக்கோலை பயன்படுத்தி காகிதத்தை தயாரித்து அதில் பத்திரிகையை அச்சிட்டார். இந்த காகிதம் வெள்ளை நிறத்தில் பளிச்சிடாது. இதனால்தான் சாணித்தாள் என்று கூட இதை சிலர் விமர்சித்தார்கள். உண்மையில் இது தூற்றல் அல்ல, போற்றலே என்று சி.பா. ஆதித்தனார் எடுத்துக்கொண்டார்.

தொடக்க காலத்தில், நிகழ்வுகள் உணர்ச்சி ததும்ப பதிவு செய்யப்பட்டன. ரிக்ஷாக்காரர்கள் போன்ற விளிம்பு நிலை மக்களையும் எழுத்துக்கூட்டி தமிழ் நாளிதழை வாசிக்க வைத்த பெருமை தினத்தந்திக்கு மட்டுமே உண்டு. எளிமையும் தெளிவும் தினத்தந்தியின் பிரதான அம்சங்கள்.

துணை ஆசிரியர்கள் எளிதில் புரியாத கடினமான வார்த்தைகளை பிரயோகித்தால் அவற்றை தவிர்க்கவேண்டும் என்று கண்டிப்புடன் கூறுவது சி.பா. ஆதித்தனாரின் இயல்பு. காவலாளியிடம் செய்தியை கொடுத்து அது அவருக்கு புரிந்தால் மட்டுமே அதை அச்சேற்றவேண்டும் என்ற அடிப்படையில் சி.பா. ஆதித்தனார் செயல்பட்டு வந்தார்.

சாதாரண வாசகர்களுக்கும் செய்தி புரியவேண்டும் என்பது இப்போதும் தினத்தந்தியின் இலக்காக உள்ளது. அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் விஸ்வரூபம் எடுத்தபோது பக்கிங் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. இதை துல்லியமாக விளக்கிய பத்திரிகை தினத்தந்தியே. மூட்டைப்பூச்சி எளிதில் நம் கண்ணுக்கு தென்படாது. அது நம்மைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும். மூட்டைப்பூச்சியைப் போன்ற சின்னஞ்சிறு கருவியைப் பயன்படுத்தி உளவு பார்த்தார்கள். இதனால்தான் மூட்டைப்பூச்சியைக் குறிக்கும் ‘பக்’ என்ற வார்த்தையின் அடிப்படையில் பக்கிங் பிரபலமானது. இதை படித்த பிரிவினரும் புரிந்துகொண்டது தினத்தந்தி படித்துதான்!

சி.பா. ஆதித்தனார் அரசியல் ஈடுபாடு கொண்டு அதில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கியவுடன் தினத்தந்தியை நிர்வகிக்கும் பொறுப்பை தனது இளைய மகன் பா. சிவந்தி ஆதித்தனிடம் ஒப்படைத்தார். 1967ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்தது. திமுக ஆட்சி பீடம் ஏறியது.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்களை சொல்லமுடியும். காங்கிரஸின் தோல்வியை உறுதிப்படுத்தியதில் முக்கிய பங்காற்றிய நாளிதழ் தினத்தந்தி என்றால் மிகையல்ல. 1967ல் நடைபெற்ற தினத்தந்தியின் வெள்ளிவிழாவில் அப்போதைய முதல்வர் அண்ணாதுரை கலந்துகொண்டார். தினத்தந்தியை நிறுவிய சி.பா. ஆதித்தனாரையும் அதை திறம்பட நிர்வகித்து வந்த பா. சிவந்தி ஆதித்தனையும் அவர் மனமாரப் பாராட்டினார்.

பத்திரிகைக்கு பிரதான கச்சாப் பொருள் காகிதம். முன்பெல்லாம் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு காகிதத்தை ஒதுக்கீடு செய்துவந்தது. சிலவேளைகளில் காகிதம் போதுமான அளவு கிடைக்காது. உரிய வேளையிலும் கிடைக்காது. இதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் சன் பேப்பர் மில்லை ஆதித்தனார் நிறுவினார். சன் பேப்பர் மில்லில் தயாரிக்கப்பட்ட காகிதம் தினத்தந்தியின் தேவையை பூர்த்தி செய்ததுடன் நின்றுவிடவில்லை. மற்ற பத்திரிகைகளுக்கும்  காகிதத்தை விற்பனை செய்தது.

பா. சிவந்தி ஆதித்தனின் நிர்வாகத்தின் கீழ் தினத்தந்தி அமோக வளர்ச்சி அடைந்தது. இக்காலம், தினத்தந்தியின் பொற்காலம் என்றே கருதப்படுகிறது. 1960களில் தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பா. சிவந்தி ஆதித்தன் (2013ல் மறையும் வரை) 50 ஆண்டுக்காலம் கோலோச்சினார்.

2012ம் ஆண்டு நவம்பர் மாதம் தந்தி டிவி சேனல் உதயமானது. குறுகிய காலத்திலேயே மக்களின் அபிமானத்தை தந்தி சேனல் பெற்றுவிட்டது.

2013 முதல் தினத்தந்தியின் நிர்வாகத்தை பா.சிவந்தி ஆதித்தனின் மகன் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கவனித்து வருகிறார். மாலை மலரை சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தனின் மகன் பா. சிவந்தி ஆதித்தன் நிர்வகித்து வருகிறார்.

2015ல் டி.டி. நெக்ஸ்டு (DT Next) என்ற பெயரில் ஆங்கில நாளிதழை தினத்தந்தி குழுமம் தொடங்கியது. ஒரு ரூபாய்க்கு இப்பத்திரிகை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இது சென்னையில் மட்டுமே வெளிவருகிறது. இதை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தியின் முத்திரை வாசகங்களில் ஒன்றான ‘தினத்தந்தி உயிர்த்துடிப்புள்ள நாளிதழ்’ இப்போதும் இப்பத்திரிகைக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

1992 ல் பொன்விழா கண்ட தினத்தந்தி, இப்போது பவளவிழா காண்கிறது. ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட தினத்தந்தி உரிமையாளர்கள், பத்திரிகையில் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைவருக்கும் தலா ஒரு சவரன் பரிசளிப்பது குறிப்பிடத்தக்கது.

கலங்கரை விளக்கத்தை இலச்சினையாக கொண்டு இயங்கிவரும் தினத்தந்தி நாளிதழ், சுடர் பாய்ச்சி வழிகாட்டி வருவதுடன் நின்றுவிடாமல் இடர் குறுக்கிட்டால் அதை இடறி முறியடிக்கும் படைக்கலனாகவும் திகழ்கிறது.

சென்னை பல்கலைக் கழக அரங்கில் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் தினத்தந்தி பவள விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார் என்று தகவல். தமிழகம் அந்த தருணத்திற்காகக் காத்திருக்கிறது.