அயோத்திக்கு அச்சாரம் போல வேலூர் ஜலகண்டேஸ்வரர் பிரதிஷ்டை! அசாத்தியம் போல தோன்றியதை சாதித்த ஸ்வயம்சேவகர் ராம. கோபாலன்!!

 

அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் தவ கிம் வத, ராமதூத க்ருபா சிந்தோ மத்கார்யம் சாதகய ப்ரபோ ||

(சாதிக்க முடியாத காரியங்களை சாதித்த ராமதூதனே! உன் கருணையால் அசாத்யமான காரியங்களை நான் சாதிக்க அருள்வாயாக!)

* குரு சமர்த்த ராமதாஸர் சத்ரபதி சிவாஜிக்கு அருளிய நல் உபதேசம் சாதிக்க முடியாத விஷயங்களை சாதித்துக் காட்ட வைத்தது. சத்ரபதி சிவாஜி குருவருளால், புத்தி கூர்மையால், யுத்த தந்திரத்தால் முகலாய சாம்ராஜ்யத்தை அடக்கி ஒடுக்கி வென்று ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

* சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவுக்காக  அவர் தவம் செய்த கன்யாகுமரி பாறையில் மிகச் சிறப்பு வாய்ந்த நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டுமென விரும்பினார் பரமபூஜனீய குருஜி. அவரது விருப்பத்தை நிறைவேற்ற அப்போதைய சங்க அகில பாரத பொதுச் செயலாளர் ஏக்நாத் ரானடேஜி தனியொரு மனிதராக கன்யாகுமரி நோக்கிப் பயணப்பட்டார். அவர் மிகச் சிறந்த புத்திசாலி, பொறுமைசாலி, யதார்த்தவாதி. அவருக்கு தமிழ் தெரியாது. மத்தியில் அப்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. கலாச்சாரத்துறை அமைச்சரோ முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தமிழகத்திலோ காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. கன்யாகுமரியில் விவேகானந்தர் தவம் செய்த பாறை சார்ந்த பகுதிகளில் கிறிஸ்தவ மீனவர்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்தது. இத்தனை தடைகளையும் தகர்த்து காஞ்சி மஹா பெரியவன் பரிபூரண ஆசீர்வாதத்துடன் விவேகானந்தருக்கு நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது.

தமிழகத்தில் 1980களில் ஹிந்து கடவுள்களுக்கு அவமதிப்பும் அவமரியாதையும் உச்சகட்டத்தில் இருந்தன. கரூரில் மானனீய யாதவராவ் ஜோஷிஜி, சூரிஜி, கோபால்ஜி அனைவரும் கலந்து பேசி விவாதித்து ஹிந்துக்களுக்காக தமிழகத்தில் வாதாட, பரிந்துபேச, வீதிக்கு வந்து போராட ஒரு இயக்கம் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. அதன் முழுப் பொறுப்பும் ராம. கோபாலன்ஜி என்றும் முடிவாகியது. கரூரிலிருந்து அதே கன்யாகுமரிக்கு தனியொரு மனிதனாக, கையில் சொற்பத் தொகை ரூ.80 உடன் ராம. கோபாலன்ஜி பயணப்படுகிறார். இன்றோ தமிழகம் எங்கும் பட்டி தொட்டியெல்லாம் கிராமங்கள், நகரங்கள் என எங்கெங்கு காணினும் லட்சக்கணக்கான விநாயகர் ஊர்வலங்கள்!

அசாத்ய சாதனையல்லவா இது? இயல்பிலேயே மென்மையான கோபால்ஜி போன்ற ஒருவரால் இதை எப்படி சாதிக்க முடிந்தது? ராம. கோபாலன்ஜி மிகச் சிறந்த பாடகர். மிக அருமையான கவிஞர். சங்கத்தின் இசை வாத்தியங்களை மிக அற்புதமாக வாசிப்பார். அவரது புல்லாங்குழல் வாசிப்பு மனதை உருக்கும் அற்புதம். அவர் பன்மொழிகளில் வித்தகர். தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி – இந்த  மொழிகளில் மிகுந்த பாண்டித்யம் பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் செறிந்த புலமையும் ஆர்வமும் கொண்டவர். பொதுவாக, உளவியல் ரீதியாக இந்த நற்பண்புகள் உடையவர்கள் மிகவும் மென்மையானவர்களாக, கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். ராம. கோபாலன்ஜியும் இயல்பிலேயே மிக மென்மையானவர். ஆனால் அகில பாரத அதிகாரி ஹிந்துக்களுக்காக தமிழகத்தில் ஒரு போர்க்குணம் கொண்ட இயக்கம் ஆரம்பிக்க வேண்டும், அதற்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியவுடன் அதனை இன்முகத்துடன் ஏற்க வைத்தது எது?  ஸ்வயம்சேவகர்களுக்கே உரிய தலைமைக்குக் கீழ்ப்படியும் குணம். அந்த குணம்தான் அவரை இரும்பு மனிதராக்கி கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக சாதனைகள் புரிந்து நமக்கெல்லாம் வழிகாட்டியாகவும் திகழ வைத்தது. ஆன்மிக ரீதியாக அவரது மாபெரும் சாதனை வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சிவலிங்கப் பிரதிஷ்டை. தன்னிகரற்ற தலைமைக்குத் தேவையான அடிப்படை குணங்கள் திட்டமிடுதல், யதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், சரியான நபர்களை ஒருங்கிணைத்தல், தொடர்ந்து உற்சாகப்படுத்துதல், என்ன பிரச்சினை வந்தாலும் அடுத்து என்ன செய்வது என்று உடனடியாக யோசித்தல். மேலே கூறிய ஐந்து நற்பண்புகளும் ஒருங்கே பெற்றவர்  நம் ஆசான் ராம. கோபாலன்ஜி. வேலூரில் முதலில் ஜலகண்டேஸ்வரர் கோயில் சிவலிங்கப் பிரதிஷ்டை என வேலூர் கார்யகர்த்தர்களை, முக்கியமான ஊர்ப் பெரியவர்களையே முடிவெடுக்க வைத்தார். எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கும் ஏழை முனுசாமிஜி போன்றோர் அடங்கிய அருமையான குழுவை உருவாக்கினார்; அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரை பலமுறை தொடர்புகொண்டு அவருடைய முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனை அணுகி அவரது அன்பையும் ஆதரவையும் முழுமையாகப் பெற்றார். நிறைவாக வேலூரைச் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களிலும் கண் துஞ்சாது பணியாற்றி மிகப் பெரிய மக்கள் வெள்ளத்தை, ஜனசமுத்திரத்தை ஒன்றுதிரட்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சிவலிங்கப் பிரதிஷ்டையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். அகில பாரத அளவில் அயோத்தி ராமர் கோயிலுக்கு பிள்ளையார் சுழி போட்டது வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் என்றால் அது மிகையாகாது.

அரசியல் ரீதியாக நோக்கினால், ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் திமுக, அதிமுகவிற்கு மாற்றுசக்தி வேண்டும் என்ற பெரிய தாக்கம் தமிழகத்தில், குறிப்பாக ஹிந்து இயக்கங்களில் இருந்தது. அப்போது அனைத்து ஹிந்து இயக்கங்களின் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி டாக்டர் ராமதாஸ், மதிமுகவின் வை.கோ ஆகியோரை முதலில் நேரடியாகத் தொடர்புகொண்டு நல்லுறவையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தினார். இவர்கள் இருவரும் அடிப்படையில் நாத்திகவாதிகள். ஆனால் மிகச் சிறந்த நற்பண்பாளர்கள். தமிழக அரசியலுக்கு முதன்முறையாக நல்ல தீர்வு காண வழிகாட்டியவர் ராம. கோபாலன்ஜி மட்டுமே.

ராம.கோபாலன்ஜி என்ற மாமனிதரை சுருக்கமாக விளக்க வேண்டுமானால் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் – தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும் – வயிரமுடைய நெஞ்சு வேண்டும் – இது வாழும் முறைமையடி பாப்பா.” வாழும் முறைமைக்கு வழிகாட்டியான எனது ஆசான் கோபால்ஜிக்கு சமர்ப்பணம்.