“பாரதத்தை யாராலும் வெல்லமுடியாது!” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத சேவா பிரமுக் பொறுப்பில் இருந்த சீதாராம்ஜி கடந்த 5 ஆண்டுகளாக ‘பாரத பரிக்ரமா’ பாத யாத்திரை செய்து 23 மாநிலங்களில் 2,300க்கும் அதிகமான கிராமங்களுக்குச் சென்று தங்கி ஊர் மக்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். பரிக்ரமாவின் நிறைவு விழா ஜூலை 9 அன்று கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ்சின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் சிறப்புரையாற்றினார்.

 

நிகழ்ச்சியில் வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்த மகராஜ், ஆர்.எஸ்.எஸ் அகில பாரத இணை பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சினிமா இயக்குநர் விசு, பாடலாசிரியர் பிறைசூடன் ஆகியோர் பேசினர்.

மோகன் பாகவத்தின் சிறப்புரையிலிருந்து:

கிராம பண்பாட்டை கடைபிடித்தால், நாட்டில்  எழுச்சி ஏற்படுத்த முடியும். இருள் என சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. இருளைப் போக்க, ஒரு சிறிய விளக்கை ஏற்றவேண்டும்.

இந்த நாட்டின் பண்பாடு, விவசாயிகளிடம் உள்ளது. விவசாயிகள் மண்ணை மதிக்கின்றனர். சில நாடுகளில் மண்ணை மதிக்காததால் தான் அங்கு எதுவுமே பயிர் செய்ய முடியாத நிலை உள்ளது. வளம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக எதையும் செய்யக்கூடாது. காடு இல்லாவிட்டால், நாடு சுபிட்சமாக இருக்க முடியாது.  நாகரிகம் என்ற பெயரில் நாடு நரகம் ஆகக்கூடாது.

நாட்டுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால், அதனால் நமக்கு என்ன என்ற அலட்சியம் இருக்கிறது. நாட்டுக்கு வளர்ச்சி வேண்டும். ஆனால் சுற்றுச்சூழலை அழித்து வளர்ச்சி தேவையில்லை. நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளில் மதம் இருக்கிறது; ஆனால் இந்தியாவில் இருப்பது தர்மம்.

பாரதத்தை யாராலும் வெல்ல முடியாது. சிறுதுளிகள் சேர்ந்து பெருவெள்ளம் ஆவது போல, பாரதத்தின் குரு சக்தியை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

 

**************************************************************************************************

பாரதத்தின் சக்தியை உலகுக்கு உணர்த்தும் பயணத்தை, சுவாமி விவேகானந்தர் கன்யாகுமரியில் இருந்துதான் துவங்கினார். அதே கன்யாகுமரியில் இருந்துதான் சீதாராம்ஜி பாரத பரிக்ரமா யாத்திரையை துவங்கினார். ‘தர்மத்தை நிலைநாட்ட இந்த மண்ணில் மீண்டும் அவதரிப்பேன்’ என்ற கிருஷ்ணபகவான் பிறந்த ஜென்மாஷ்டமி நாளில் பாரதத்தை அடிமைத்தனத்துக்கு ஆளாக்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கிய நாளில் அவர் பயணத்தை துவங்கினார். மாற்றத்தைக் கொடுக்கும் குரு பூர்ணிமா நாளில் அவர் யாத்திரையை  நிறைவு செய்துள்ளார்.”

-மோகன் பாகவத்

**************************************************************************************************