பாகிஸ்தானில் ஹிந்துக்களை தாக்கிய 218 பேர் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தானில், இஸ்லாம் மதத்தை பற்றி, பள்ளி முதல்வர் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அப்பள்ளிக்கூடம் அடித்து நொறுக்கப்பட்டது. ஹிந்துக்களின் கோவில், வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட, 218 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.

அண்டை நாடான, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள, கோட்கி மாவட்டத்தில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள், அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இங்கு செயல்பட்டு வரும் சிந்து பப்ளிக் பள்ளியில், நோட்டன் மால் என்பவர், முதல்வராக உள்ளார்.இவர், இஸ்லாம் மதத்தை பற்றி தவறான கருத்துகளை தெரிவித்ததாக, பள்ளி மாணவரின் தந்தை, அப்துல் அகீஸ் ராஜ்புத் என்பவர் குற்றம்சாட்டினார்.இதையடுத்து, ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள், பள்ளி முதல்வர், நோட்டன் மாலை தாக்கினர்; சிந்து பப்ளிக் பள்ளியை அடித்து நொறுக்கினர்.கோட்கி மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. அங்குள்ள, தாம் மந்திர் என்ற ஹிந்து கோவில், தாக்குதலுக்கு உள்ளானது.கலவரத்தில் ஈடுபட்ட, 218 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளி முதல்வர், நோட்டன் மால், கைது செய்யப்பட்டு உள்ளார்.