பழனி முருகன் கோவில் ஊழியர்கள் தாக்கியதில் பக்தர் மண்டை உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில், ராஜகோபுரம் வழியாக நுழைய முயன்ற எடப்பாடி பக்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோவில் ஊழியர்கள், திடீரென தாக்கியதில் பக்தர் ஒருவரின் மண்டை உடைந்தது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த நிலையிலும் தினமும் பாதயாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஈரோடு, எடப்பாடியை சேர்ந்த காவடி பக்தர்கள் நேற்று வந்தனர். ஈரோட்டிலிருந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள், ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், எடப்பாடியிலிருந்து காவடி எடுத்து வந்த பக்தர்களும் உள்ளே நுழைய முயன்றனர்.

இதனால் பக்தர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த கோவில் ஊழியர்கள், பாதுகாவலர்கள் பக்தர்களுடன் வாக்குவாதம் செய்யவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எடப்பாடியை சேர்ந்த பக்தர், சந்திரன் தலையில் காயம் ஏற்பட்டது. கோவில் வெளிப்பிரகாரத்தில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பக்தரை கோவில் ஊழியர்கள் வெளிப்பிரகாத்திற்கு அழைத்து வந்து தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கூறி, அங்கு திரண்ட பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி., சுப்பையா தலைமையில் போலீசார் பேச்சு நடத்தியதில் பக்தர்கள் சமாதானம் அடைந்தனர். மேலும், இதில் தொடர்புடைய கோவில் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டதால் பக்தர்கள் கலைந்து சென்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஊழியர்களால் தாக்கப்படுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதில் ஈடுபடும் கோயில் ஊழியர்கள் மீது, நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.