தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். திருவண்ணாமலையில் `என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:
தமிழகத்தில் இளைஞர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதேபோல, வேலைக்கு ஏற்ற ஊதியமும் இல்லை. தண்ணீரின்றி விவசாயம் பொய்த்துப்போனது. நீராதாரத்தைப் பெருக்க திமுக அரசு முயற்சிக்கவில்லை. லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் அடாவடியை அகற்றுவதே இந்த யாத்திரையின் நோக்கம்.
தமிழகத்தில் தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லாமல் உள்ளன.தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், அரசுப் பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகளுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்துகிறது. அரசுப் பள்ளிகளில் 11 ஆயிரம் வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளன என புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த கல்வியை பிரதமர் மோடி கொடுக்கிறார். இந்தியா முழுவதும் நவோதயா பள்ளிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளிகூட இல்லை. நவோதயா பள்ளி வரவிடாமல் திமுக அரசு தடுக்கிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலையில், மத்திய அரசின் ஏகலைவா பள்ளியைத் தொடங்க அனுமதிக்கவில்லை. இதேபோல, பிஎம்சிதிட்டத்தின் கீழ் பள்ளியைத்தொடங்கவும் அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.