பரதன் பதில்கள்: இந்த ஆண்டின் தமாஷ் எது?

பரதனாரே…  தங்களுக்குப்  பிடித்த  ஒரு  திருக்குறள்

– ச. தம்பிதுரை, பழவேற்காடு

 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்”

இந்த குறள் சொல்லும்போது இரண்டு உதடுகளும் ஒட்டாது. எந்தெந்த பொருள்களிலிருந்து பற்று விலகுகிறதோ அந்தந்த பொருள்களால் துன்பமில்லை என்கிறார் வள்ளுவர்.

 

பணத்தால்  சாதிக்க  முடியாதது  ஏதாவது  இருக்கிறதா?

– ந. கோவிந்தன், ஊட்டி

 

ஆர்.கே.நகர் தொகுதியில் பணத்தால் முடியும் என்று தினகரன் உறுதியாக நம்பினாரே… நடக்கலையே…

 

* இந்த  ஆண்டின்  தமாஷ்  எது?

– அ. கீர்த்தீஸ்வரன், நல்லகவுண்டன் பாளையம்

வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோலை மிதக்க விட்டாரே அமைச்சர் செல்லூர் ராஜு. அவருக்கு ‘தெர்மாகோல் விஞ்ஞானி”  என்று பட்டமே கொடுக்கலாம்.

 

தொழிலாளர்களை  ஒன்றுபடுத்துகிறதா  கம்யூனிஸ்ட்?

– உ. சுவாமிநாதன், வெள்ளக்கோயில்

 

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று கோஷமிடுவார்கள். ஆனால் உள்ளூர் தொழிலாளர்களை இரண்டாகப் பிரித்து விடுவார்கள். ஒரே தொழிற்சாலையில் வலது, இடது தொழிற்சங்கங்கள் ஏன்?

 

கிறிஸ்தவர்கள் போன்று முஸ்லிம்கள்  மதம் மாற்றுவதில்லையே…?

– பா. ஸ்வேத்தா, திருச்சி

 

மகாத்மா காந்திஜியின் மூத்த மகன் ஹரிலால் மதுவுக்கு அடிமையானார். அவரை  முஸ்லிமாக மதம்மாற்றி ‘அப்துல்லா காந்தி’ என்று பெயர் சூட்டி முஸ்லிம் லீக் மேடைகளிலேயே காந்திஜியை விமர்சித்து பேச வைத்தனர். கிறிஸ்தவர்கள் மாற்றுவது தெரியும்; முஸ்லிம்கள் மாற்றுவது தெரியாது.

 

நாகரிகம் என்ற பெயரில் சில இளைஞர்கள் ஒரு காதில் மட்டும் கடுக்கன் அணிந்து

கொள்வது   பற்றி…?

– மா. முத்தரசன், அழகன் குளம்

 

ஒரு பிரபலமான கல்லூரியில் சேருவதற்காக நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த மாணவர்களில் சிலர் ஒரு காதில் கடுக்கன் அணிந்திருந்தார்கள்; மேலும் சிலர் வாயைச் சுற்றி தாடி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு  இடமில்லை என்று உடனேயே அனுப்பி விட்டனர். ஒரு காதில் கடுக்கன் அணிவது பண்பாடுஅல்ல.

 

* டெல்லியில்  மூன்று  மாநகராட்சிகளிலும்  பாஜக  வெற்றி  பெற்றது  பற்றி?

– பூ. பிரசாந்தி, சரவணம்பட்டி

கேஜ்ரிவாலைப் பற்றி தப்பா எடைபோட்டு வாக்களித்ததற்கு பரிகாரமாக இப்போது பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். ஏதோ ஒரு நம்பிக்கையில் டெல்லி மக்கள் கேஜ்ரிவாலுக்கு வாக்களித்தனர். அதை சரியாகப் பயன்படுத்தாமல் மோடி எதிர்ப்பையே பிரதானமாக்கி பிரதமராகி விட கனவு கண்டவருக்கு ஒரு சவுக்கடி.

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.