நீதிமன்றத்திலாவது உண்மையை சொல்லுங்கள் கெஜ்ரிவால்: அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

‘நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நேரம் வந்துவிட்டது; குறைந்தபட்சம் நீதிமன்றத்தின் முன்பாவது உண்மையை சொல்லுங்கள்’ என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.

மதுபான கொள்கை தொடர்பாக அமலாக்கத்துறையின் விசாரணைக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 5வது முறையாக சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் புறக்கணித்தார். இதற்கிடையே பிப்.,17ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ”ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் இப்போது ஊழலில் மூழ்கியுள்ளனர். கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நேரம் வந்துவிட்டது. கெஜ்ரிவால் குறைந்தபட்சம் நீதிமன்றத்தின் முன்பாவது உண்மையை சொல்லுங்கள்” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: ஜவஹர்லால் நேரு பல்கலையில் கலவரத்தில் ஈடுபட்ட கும்பலுக்கு ஆதரவாக ராகுல் அங்கு சென்றிருந்தார். இது பற்றி ராகுல் பதில் சொல்லியாக வேண்டும். காங்கிரஸ் ஏன் நாட்டை பிளவுப்படுத்தும் அரசியலை செய்கிறது? அவர்களது அறிக்கை ஹிந்துக்களுக்கும், ஹிந்திக்கும் எதிராக உள்ளது. ஒரு முதல்வரின் மகன் சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுகிறார். இதெல்லாம் தற்செயலானதா? தங்களது கொடும் செயல்களை மறைக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக சேர்ந்துள்ளது. இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.