இருபது லட்சம் இந்தியர்களுக்கு ஏ.ஐ., பயிற்சி: சத்ய நாதெள்ளா

வரும் 2025ம் ஆண்டுக்குள், 20 லட்சம் இந்தியர்களுக்கு, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்க இருப்பதாக, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா உறுதியளித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சத்ய நாதெள்ளா, செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த 90களின் பிற்பகுதியில், கணினிகள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தன. அவை விரல் நுனியில் தகவல்களை வழங்கின. அதேபோல் தற்போது, செயற்கை நுண்ணறிவு காலத்தில், உங்கள் விரல் நுனியில் நிபுணத்துவம் இருக்கும்.

கணினி, இணையதளம், கிளவுட் மற்றும் ஏ.ஐ., என தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களில் நான் இருந்திருக்கிறேன். இந்தியாவில் அடிப்படை அறிவியல் சார்ந்த தொழில்களில், அதிக முதலீடு மற்றும் மூலதனம் செலுத்தப்படும் காரணத்தினால், இங்கு செயற்கை நுண்ணறிவு மிக மிக முக்கியமானதாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் இந்தியாவும், உலக நாடுகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அதில் எவ்வித குறைவும் இல்லை.

எங்கள் நிறுவனத்தின் ‘கோபைலட்’ செயற்கை நுண்ணறிவு சாட்பாடை, ஆக்சிஸ் வங்கி அதன் பணியாளர்களுக்கு கட்டாயமாக்கி உள்ளது. இது போன்ற ஏ.ஐ., தயாரிப்புகளை, இந்திய நிறுவனங்கள் விரைவில் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் பத்து மாநில அரசுகளுடன் இணைந்து, ஏ.ஐ., திறன் பயிற்சியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும்.

அதன்படி, முதற்கட்டமாக 100 கிராமப்புற தொழிற்கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களில் உள்ள ஐந்து லட்ச மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு பற்றிய அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி வழங்கப்படும்.
அத்துடன் 5,000 பயிற்சியாளர்கள் வாயிலாக, ஒரு லட்சம் பெண்களுக்கு, செயற்கை நுண்ணிவுக்கான தொழில்நுட்ப திறன் பயிற்சியும் வழங்கப்படும். மேலும் 2.50 லட்சம் அரசு அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். கணினி, இணையதளம், கிளவுட் மற்றும் ஏ.ஐ., என தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களில் நான் இருந்திருக்கிறேன். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் இந்தியாவும், உலக நாடுகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அதில் எவ்வித வேறுபாடும் இல்லை. இந்தியாவில் அடிப்படை அறிவியல் சார்ந்த தொழில்களில், அதிக முதலீடு செய்யப்படும் காரணத்தால், செயற்கை நுண்ணறிவு மிக மிக முக்கியமானதாக இருக்கும்.