பல்லடத்தில் பிரமாண்ட கூட்டம் பிரதமர் மோடி வருகைக்காக ஏற்பாடு

வரும் 25ம் தேதியன்று, பிரதமர் மோடி பல்லடத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு, தமிழகமே இதுவரை கண்டிராத அளவில் கூட்டத்தைத் திரட்டுவதற்கு, பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில், 90 நாட்களாக, தமிழகம் முழுதும், யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

சட்டசபை தொகுதி வாரியாக மேற்கொண்டு வரும் இந்த யாத்திரையில், நேற்று முன்தினம் வரை, 189 தொகுதிகள் முடிவடைந்துள்ளன. வரும் 25ல், 234வது தொகுதியாக, திருப்பூரில் யாத்திரைமுடிவடையவுள்ளது.

அன்றைய தினம் மாலை 3:00 மணிக்கு, பல்லடத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தை, தமிழகமே இதுவரை கண்டிராத அளவில் மிக பிரமாண்ட பொதுக்கூட்டமாக நடத்துவதற்கு, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பல்லடம் அருகே மாதப்பூர் கிராமம் அருகில், இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பந்தல் அமைப்பதற்கு மட்டும் 360 ஏக்கர் இடமும், பார்க்கிங், உணவு, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட மற்ற வசதிகளுக்காக, 680 ஏக்கர் இடமுமாக மொத்தம், 1,040 ஏக்கர் இடம் எடுக்கப்பட்டு, அவற்றை சுத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது. இவற்றைத் தவிர, மருத்துவ முதலுதவி உள்ளிட்டவற்றுக்காக மேலும், 45 ஏக்கர் இடத்தையும், தயார் செய்யதிட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 25,000 வாகனங்கள் வரும் என்று, பா.ஜ., நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். மதியம் மற்றும் இரவு என இரு வேளைகளில், 13 லட்சம் உணவுப் பொட்டலங்கள்தயார் செய்யப்படஉள்ளன. கூட்டத்துக்கு, ஐந்து லட்சம் பேரைத் திரட்ட வேண்டுமென்று, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ள பா.ஜ., தலைவர் அண்ணாமலை, யாரையும் பணம் கொடுத்து அழைத்து வரக்கூடாது என்றும், உறுதியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனால், இந்த பொது கூட்டத்துக்கு வரும் மக்கள் கூட்டம், கட்சியின் தற்போதைய பலத்தை உலகிற்கு காட்டும் என்று, பா.ஜ.,நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.