லட்சத்தீவு சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.3,600 கோடி ஒதுக்க திட்டம்

பிரதமர் மோடி இந்தாண்டு தொடக்கத்தில் லட்சத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அழகிய கடற்கரை, சாகச சுற்றுலா வசதிகள் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட படங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. இதை மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சமூக ஊடகத்தில் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் உள்ள பிரபலங்கள் பலர் மாலத்தீவு சுற்றுலாவை புறக்கணித்து லட்சத்தீவு செல்வதாக அறிவித்தனர்.
லட்சத்தீவு அழகான கடற்கரைமற்றும் தீவுகளை கொண்டிருந்தாலும், அங்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் உள்நாட்டு சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க லட்சத்தீவின் பிற தீவுகளிலும் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்த கவனம் செலுத்தப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி லட்சத்தீவில் ரூ.3,600கோடி செலவில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லட்சத்தீவு கேரள கடற்கரையிலிருந்து 220 கி.மீ. முதல் 440 கி.மீ. தூரம் வரை 36 தீவுகளாக 32 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உள்ளது. இங்கு மேம்பாட்டு பணிக்கு 13 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆன்ட்ரோத், கல்பேனி, கடாமத் தீவுகளில் துறைமுக வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்கான நிதி, துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்து மேம்பாட்டுக்கான சாகர்மாலா திட்டத்தின் கீழ் கிடைக்க உள்ளது.