நியூயார்க்கில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய வம்சாவளியினர் பேரணி மேற்கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் வன்முறையாக வெடித்தது. ஆனால், இந்த சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை எனவும், எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் எனவும் மத்திய அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விளக்க பொதுக்கூட்டமும் பாஜ., சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளிலும், இந்த சட்டம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில நாடுகளில், ஆதரவாகவும், எதிராகவும் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் பேரணியாக சென்றனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள், குடியுரிமை சட்டம், மனித உரிமைகள் பற்றியது எனவும், பாகிஸ்தானில் 1947ல் 23 சதவீத சிறுபான்மையினர் இருந்தனர் ஆனால் தற்போது 1 சதவீதம் தான் இருக்கின்றனர் எனவும் எழுதிய பதாகைகளுடன் கலந்துகொண்டனர்.