ஹிந்து அகதிக்கு கிடைக்கிறது குடியுரிமை எதிர்ப்பவர்களுக்கு வருகிறது ஏழரை

பாஜக  இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தபிறகு தனது தேர்தல் வாக்குறுதிகளை மளமளவென்று நிறைவேற்றி வருவது எதிர்க்கட்சிகளை மிரளச் செய்துவிட்டது.. போதாக்குறைக்கு அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாக வந்துவிடவே காங்கிரஸாரும், கம்யூனிஸ்டுகளும், திமுகவினராலும் அதை எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதில் அவர்களுக்கு பொறாமை,, வயிற்றெரிச்சல்!

அதன் விளைவுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள். போராட்டத்தை கலவரமாக்க ஆசை. மாணவர்களைத் தூண்டி விடுகிறார்கள். மாணவர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள், சமூக விரோதிகள், நக்ஸலைட்டுகள் கல்லூரிகளில் ஊடுருவிவிட்டார்கள். போராட்டத்தை ரணகளமாக்கி வருகிறார்கள். பொதுச்சொத்து நாசம், வாகனங்களுக்கு தீவைப்பு, போலீசார் மீது கல்வீச்சு போன்ற அராஜகங்களை நடத்தி வருகிறார்கள். வன்முறையில் இறங்கிய சிலரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் மாணவர்களே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிகைகளும் ஏதோ நாடே தீப்பிடித்து எரிவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஆசையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தினமலர், தினத்தந்தி போன்ற சில பத்திரிகைகள் மட்டுமே சட்டம் பற்றி தெளிவான விளக்கங்களை வெளியிட்டுள்ளன. தினமணி தலையங்கம் போராட்ட அநியாயத்தைக் கண்டித்துள்ளது. தமிழக முதல்வரும், சில அமைச்சர்களும் இந்தச் சட்டம் பற்றி தெளிவான விளக்கங்களை அளித்துள்ளனர்.

திமுக கூட்டணித் தலைவர் ஸ்டாலின் முஸ்லிம்களின் வாக்கு வங்கி அரசியல் செய்ய குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கப் பார்க்கிறார்.

அகதிகளாக வந்து வேதனையில் வாடும் ஹிந்துக்களுக்கு குடியுரிமை அளிக்கும் புண்ணியச் செயலை குறுக்கேவிழுந்து தடுக்கப் பார்ப்பவர்கள் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் கெட்டழிவார்கள். இது விஜயபாரத்தின் சாபமல்ல. வள்ளுவரின் சாபம். உஷார்!