நான் யார்?

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பற்றி எதையும் கூற இயலவில்லை என்று மேனாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தங்களைப் போன்ற மகான்களால் கூறமுடியும் என்கிறார்கள். இதைப் பற்றி நான் அறிந்துகொள்ள முடியுமா?” – பால் பிரண்டன் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் இவ்வாறு ஸ்ரீரமணரிடம் வினவினார்.

ஸ்ரீரமணர் பால்பிரண்டனையே சற்றுநேரம் உற்று நோக்கினார்.

நான் அறிந்துகொள்ள முடியுமா? என்ற கேள்வியிலுள்ள ‘நான்’ யார் – சொல்ல முடியுமா?” என்றார் ஸ்ரீரமணர்.

பால்பிரண்டன் ஒரு கணம் திகைத்தார். பிறகு நான் என்றால் பால்பிரண்டன்” என்றார்.

அவர் யாரென்று உனக்குத் தெரியுமா?”

அவரைப் பிறந்தது முதலே நான் அறிவேன்” பிரண்டன் பதிலளித்தார்.
மீண்டும் இங்கே ‘நான்’ என்கிறாய். நீ குறிப்பிடும் ‘நான்’ என்பது யார் என்று அறிந்துகொள்”.

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

உன் மனத்தை உள்புறமாகச் செலுத்து. சிந்தனை, விடாத சிந்தனை செய். தியானத்தைத் தொடர்ந்து செய்தால் உன் சந்தேகங்கள் விலகும். தெளிவு பிறக்கும்”.

பகவான் ஸ்ரீரமணரின் ஆழ்ந்த அனுபவப் பாடங்கள் பால்பிரண்டனை சிந்திக்க வைத்தன. பகவானின் வார்த்தைகளுக்குள்ளே பொதிந்து கிடந்த உண்மையை பால்பிரண்டன் உணர்ந்தார். ‘நான் யார்’ என்ற விசாரம், அதை அறிந்த பின்பு முடிவற்ற ஆனந்தம் பெறலாம் என்ற ரமண தத்துவத்தை அவர் அறிந்துகொண்டார்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்.
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்.