பரதன் பதில்கள்:தீண்டாமை பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து என்ன?

தீண்டாமை  பற்றி  சுவாமி  விவேகானந்தரின்  கருத்து  என்ன?
– அருந்ததி ராமதுரை, காஞ்சிபுரம்

ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளூர தெய்வீகம் உள்ளது என்பது சுவாமிஜியின் பிரகடனம். தீண்டாமை கூடாது என்பது மட்டுமல்லாமல் வாழ்ந்தும்  காட்டியவர்  சுவாமிஜி.

ஒருவர் பக்தி நெறியைப் பின்பற்றுகிறார். மற்றொருவர் ஒழுக்க நெறியைப் பின்பற்றுகிறார். இவர்களில்  சிறந்தவர்  யார்?
– ஸ்ரீராம் சக்திவேல், மாணிக்கம்பாளையம்

இடது கண் முக்கியமா? வலது கண் முக்கியமா? என்று கேட்பதுபோல் இருக்கிறது. இரண்டு கண்ணும் முக்கியம்தான். பக்தி நெறியைப் பின்பற்றும் ஒருவர் ஒழுக்க நெறியையும்,ஒழுக்க நெறியைப் பின்பற்றுபவர் பக்தி நெறியையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மோடி நினைத்திருந்தால் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு  வந்திருக்கலாமே  என்ற  குற்றச்சாட்டுப் பற்றி?
– பி. முருகன், ஈரோடு

இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே? அப்படியிருந்தால் அயோத்தி கோயில், பொது சிவில் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம், 370 நீக்கம் என பாஜகவின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தியிருப்பாரே!

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தேசிய கீதம்  பாடியவர்களைக்  கூட  போலீஸ்  தாக்கியதாமே?
– ஆர். சிவபிரசாத், பெங்களூரு

போலீஸ் அடிக்கும்போது தேசிய கீதம் பாடினால் அடிக்க மாட்டேன் என்று எங்களுக்கு மெசேஜ் அனுப்புனீர்களே… போலீசுக்கு அனுப்பினீர்களா என்று ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அழுது புலம்பியுள்ளார். ஐயோ பாவம்!

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை திசை திருப்பியதில் மதவாத இயக்கங்களுக்கும் பங்கு உண்டு என்கிறார்களே  போலீஸ்  அதிகாரிகள்?
– யாழினி, தஞ்சாவூர்

மதவாத இயக்கம் என்று மூடி மறைப்பானேன். நேரடியாகவே முஸ்லிம் அமைப்புகள் என்று சொல்லத் தயங்குவது ஏன்? எஸ்.டி.பி.ஐ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எல்லாம் முஸ்லிம் அமைப்புகள் தானே!

அமைதியாக துவங்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் மோடி எதிர்ப்புப்  போராட்டமாக  மாறியது  ஏன்?
– எஸ். பிரியா, ராமநாதபுரம்

நக்ஸல்பாரி இயக்கங்களின் ஊடுருவல் தான் காரணம்.
* மே 17 இயக்கம் (விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பு)
* மக்கள் கலை இலக்கியக் கழகம் (இது நக்ஸல் அமைப்பு)
* மக்கள் அதிகாரம் (தீவிரவாத கம்யூனிஸ்ட் அமைப்பு)
* கூடங்குளம் பாதுகாப்பு இயக்கம் (அந்நிய நாட்டு நிதி பெறும் அமைப்பு)
* பூவுலகின் நண்பர்கள் (இடதுசாரி ஆதரவு இயக்கம்)

ஜல்லிக்கட்டுப்  போராட்டத்தில்  சீமானின்  பங்கு?
– வி. மனோகரன், மேட்டுப்பாளையம்

மாட்டுக்கறி தின்பது என்பது எங்கள் ஜனநாயக உரிமை என்று முழங்கியவர், தினசரி நானே 1லீ கிலோ மாட்டுக்கறி சாப்பிட்டவன் என்று தம்பட்டம் அடித்தவர், இன்று, ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சாரம் என்று முழங்கியபோது, இவரின் இரட்டை வேடம் அம்பலமானது.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.