நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சியே காரணம்

“நாட்டின் விரைவான வளர்ச்சிக்கும், பாராட்டுக்கும் நிலையான ஆட்சியே காரணம்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார்.

முதலாவதாக பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின் மெஹ்சானா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், விராம்காம்- – சமாகியாலி ரயில் தடம், சபர்மதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உட்பட 5,950 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின், அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நாட்டின் விரைவான வளர்ச்சிக்கும், உலக அளவில் இந்தியாவின் புகழ் மேம்படவும் நிலையான ஆட்சியே காரணம். அதை தந்த மக்கள் சக்தியே இதன் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் உள்ள நிலையான, பெரும்பான்மையான அரசு இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இதை இங்குள்ள அனைவரும் அனுபவித்து உள்ளனர். இதன் அடிப்படையில் நாடு முழுதும் நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

குஜராத்தின் விரைவான வளர்ச்சிக்குப் பின், கடந்த பல ஆண்டுகளில் போடப்பட்ட வலுவான துாண்கள், பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள் உள்ளன. எடுக்கும் உறுதிமொழியை நிறைவேற்றுவதில் நான் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்