அணிவகுப்புக்கு அனுமதி தராத போலீஸ்: ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அவமதிப்பு வழக்கு

அணிவகுப்புக்கு அனுமதி வழங்காத போலீசாருக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுதும் அக்., 22, 29ம் தேதிகளில், 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட அமைப்புகள் அளித்த மனுக்களை போலீசார் நிராகரித்தனர். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘நிபந்தனை அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில், 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் உள்துறை முதன்மை செயலர், டி.ஜி.பி., மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு என, தனித்தனியாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி வழங்காததால், நேற்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரபுமனோகர் ஆஜராகி, ‘நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி வழங்காததால், அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும்’ என, முறையீடு செய்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவு பெற்று விட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை; மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்து, வழக்கு விசாரணைக்கு பட்டியலிட்ட பின் விசாரிக்கப்படும்’ என்றார்.