உங்களுக்கு துதி பாட மாட்டோம் :முதல்வருக்கு துணை வேந்தர் கடிதம்

மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தி நிகேதனில் அமைந்துள்ள விஸ்வபாரதி பல்கலையில் கல்வெட்டு வைப்பது தொடர்பாக எழுந்த பிரச்னை தீவிர அரசியலாகியுள்ளது. இந்நிலையில், ‘உங்களுக்கு துதி பாட மாட்டோம்; ஊழல் அமைச்சர்களால் வழிகாட்டப்படுகிறீர்கள்’ என, அரசியல் நெடியுடன் கூடிய கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பல்கலை துணை வேந்தர் அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சாந்தி நிகேதனில் அமைந்துள்ளது விஸ்வபாரதி பல்கலைக்கழகம். மத்திய பல்கலையான இதற்கு, ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐ.நா.,வின் கலாசார அமைப்பு சமீபத்தில், பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் அளித்துள்ளது.

 இதை குறிக்கும் வகையில் பல்கலை வளாகத்தில் புதிய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை வேந்தரின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதற்கு, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கிய இந்த பல்கலையின் கல்வெட்டில் அவருடைய பெயர் இடம்பெற வேண்டும்’ என, முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட அக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பல்கலை துணை வேந்தர் பித்யுத் சக்ரவர்த்தி, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:நாட்டில் உள்ள மத்திய பல்கலைகளில், இந்த பல்கலைக்கு மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி வேந்தராக உள்ளார். யுனெஸ்கோவின் சிறப்பு அந்தஸ்து கிடைப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளை, எந்த அளவுகோளாலும் அளவிட முடியாது. வேந்தர் என்ற அடிப்படையில் பிரதமரின் பெயர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. தொல்லியல் துறையின் வழிகாட்டுதல்களின்படியே இந்த கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் எதுவும் இல்லை. தாகூரையும் நாங்கள் அவமதிக்கவில்லை. உங்களுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் நீங்கள் முதல்வர் அல்ல. உங்களுக்கு துதி பாடாதவர்களுக்கும் முதல்வர் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தப் பல்கலை ஒரு காலத்தில், அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஊழல் நடந்து வந்தது. தற்போது அவை சரி செய்யப்பட்டு, சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது. இந்த மாற்றங்களால் ஏற்பட்டுள்ள தாக்கம், விரைவில் இந்த உலகுக்கு தெரியவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த பல்கலையை உருவாக்கிய மண்ணின் மைந்தன் ரவீந்திரநாத் தாகூரின் பெருமையை, சுய விளம்பரத்துக்காக இருட்டடிப்பு செய்ய வேண்டாம் என, புதுடில்லியில் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறேன்என்றார்.