நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்; விசாரணையை முழுவதுமாக முடிக்க 3 மாதம் அவகாசம் வேண்டும் – டெல்லி போலீஸ் கோரிக்கை

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தி முடிக்க டெல்லி போலீஸ் கூடுதலாக 3 மாதம் அவகாசம் கோரியிருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த சாகர்ஷர்மா, மனோரஞ்சன் டி ஆகிய இருவர் திடீரென மக்களவைக்குள் குதித்து, வண்ண புகை குப்பிகளை வீசினர். இதுபோல நாடாளுமன்ற வளாகத்திலும் அமோல் ஷிண்டே, நீலம் ஆசாத் என 2 பேர் கோஷங்களை எழுப்பியவாறு வண்ண புகை குப்பிகளை வீசினர்.
இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மகேஷ் குமாவத், லலித் ஜா என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய முக்கிய அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாலும் மலைபோல் குவிந்திருக்கும் டிஜிட்டல் தரவுகள் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டி இருப்பதாலும் டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுரிடம் டெல்லி போலீஸ் இந்த வழக்கை நடத்தி முடிக்க கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் கோரியிருக்கிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட் டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீலம் ஆசாத், மனோரஞ்சன் டி, சாகர் ஷர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.