அமலாக்கத் துறை புதிய புகார் மனு: கேஜ்ரிவால் மார்ச் 16-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

 டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் புதிய புகார் மனு டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கேஜ்ரிவால் மார்ச் 16-ல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அமலாக்கத் துறை சார்பில் பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 50-ன்கீழ் 8 சம்மன்கள் வரை அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் அந்த சம்மன்களை மதித்து விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மார்ச் 16-ம் தேதியன்று நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார். பலமுறை சம்மன்களை புறக்கணித்ததற்காக அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி அமலாக்கத் துறை இயக்குநரகம் சார்பில் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.