தேவை நம்ம ஆட்சி!

தமிழகத்தில் சமீபத்தில் பலர் இது பெரியார் மண், அண்ணா மண், பகுத்தறிவு மண், என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இது சரிதானா?

தமிழகம் என்றாலே கோயில்கள் நிறைந்த பூமி. மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவண்ணாமலை கோயில் ஆகியவற்றை தரிசிப்பவர்கள் பிரமித்துப் போகிறார்கள். கோயில்களை மையமாக வைத்துத்தான் ஊரின் அமைப்பே உருவாயிற்று. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த பூமி. ரமண மகரிஷி, வள்ளலார், ராமானுஜர், திருவள்ளுவர் போன்ற எண்ணற்ற மகான்கள் வலம் வந்த பூமி தமிழகம்.

கம்பராமாயணம், திருவாசகம், தேவாரம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், பெரிய புராணம் போன்ற நூல்கள் எழுதப்பட்டு தமிழுக்கு அணி செய்தது வரலாறு.

இன்றும் கூட சூரசம்ஹாரம் என்றால் திருச்செந்தூரிலும் கார்த்திகை தீபமென்றால் திருவண்ணாமலையிலும் ஆடிக்கிருத்திகையென்றால் முருகன் கோயில்களிலும் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிகிறார்கள்.

இத்தகைய தமிழ் மண்ணை ஈ.வெ.ரா பூமி, அண்ணா பூமி, பகுத்தறிவு பூமி என்றெல்லாம் சொல்வது கேலிக்குரியது. திமுக 1967ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் தமிழகத்தில் விஷக்கிருமிகள் பரவி விட்டன என்றார். திமுக – அதிமுக பற்றி காமராஜரிடம் கேட்டபோது இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று கருத்து தெரிவித்தார்.

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகாலமாக குட்டிச் சுவராக்கியது இந்தக் கழகங்கள்தான். எனவே, தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை உருவாக்க முயல்பவர்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுப்பது நல்லது.