தேசிய மக்கள்தொகை பதிவேடு ஏப்.1-ல் கணக்கெடுப்பு தொடக்கம் – குடியரசுத் தலைவரிடம் முதல் பதிவு

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) திட்டத்துக்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பின்போது மக்கள் தங்களின் பெயரை சேர்க்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்) உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட 21 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை குடும்ப தலைவர், கணக்கெடுப்பு அதிகாரியிடம் காட்ட வேண்டியிருக்கும்.

ஆனால் இது என்ஆர்சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான முன்னோடி பணிகள் எனவும், என்பிஆர்-க்கும், என்ஆர்சி-க்கும் வேறுபாடு இல்லை என்றும் கூறி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் சில மாநிலங்கள் என்பிஆர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்பிஆர் பணிகள் தொடங்கவுள்ளன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் முதல் நபராக தனது பெயரை பதிவு செய்து இத்திட்டதை தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் முதல் குடிமகன் என்பதால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் முதல் நபராக தன்னைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்வார்.

குடியரசுத் தலைவர் எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கி வைப்பது புதிய நடைமுறை இல்லை என்றாலும், என்பிஆர்-ஐ பொறுத்தவரை மக்கள் மத்தியில் உள்ள சர்ச்சை கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், மக்களிடையே இதுகுறித்த ஒரு வலுவான உறுதித்தன்மையை விதைக்கும் விதமாகவும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதே நாளில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடமும் என்பிஆர் விவரங்கள் சேகரிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் அலுவலகங்களுக்கு கடிதங்களை என்பிஆர் திட்ட அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

அதே தினத்தில் மத்திய அமைச்சர்கள் பலரும் பொது மேடைகளில் பங்கேற்று என்பிஆர் திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளனர்.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்த கண்ககெடுப்பு பணிகள் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.3,941.35 கோடியை ஒதுக்கியுள்ளது.