கீழடியில் நாளை முதல் 6-ம் கட்ட அகழாய்வு- காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்டஅகழாய்வுப் பணியை சென்னையில் இருந்தவாறு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நாளை (பிப்.19) தொடங்கி வைக்கிறார்.

கீழடியில் 2015-ம் ஆண்டு முதல்2019-ம் ஆண்டு வரை 5 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்தன. முதல் 3 கட்ட அகழாய்வை மத்தியதொல்லியல் துறையும், 4 மற்றும் 5-வது கட்ட அகழாய்வை தமிழகதொல்லியல் துறையும் மேற்கொண்டன. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. மண்பாண்டப் பொருட்கள், சுடுமண் பொம்மைகள், தங்கம், வெள்ளி பொருட்கள், தமிழி எழுத்துபொறித்த பானை ஓடுகள், சூதுபவளம் உள்ளிட்ட 15,500 தொன்மையான பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.

இதற்கிடையே, 5 கட்டங்களில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்திருந்தது. இதற்காககீழடி அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம்கையகப்படுத்தப்பட்டது. மேலும்அருங்காட்சியகத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளன. இப்பணிகளை முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்தவாறு காணொலி மூலம் நாளை (பிப்.19) தொடங்கி வைக்கிறார்.