குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு மறுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், போலீஸ் தடியடி தொடர்பாக, முதல்வர் அளித்த விளக்கம், திருப்தி அளிக்கவில்லை என்று கூறியும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நேற்று வெளிநடப்பு செய்தன.

இதையடுத்து ‘பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற, முஸ்லிம் சகோதர – சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும்,” என, முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி, முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில், போலீசார் தடியடி நடத்தியது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., முகமது அபூபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆகியோர், சட்டசபையில் நேற்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து, முதல்வர் கூறியதாவது: சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, சில முஸ்லிம் அமைப்புகள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில், பிப்ரவரி, 14ல், 13 பள்ளிவாசல் நிர்வாகிகளை அழைத்து, போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அப்போது, போராட்டம் நடத்தும் எண்ணம் உள்ளதா என கேட்டதற்கு, ‘இல்லை’ என, பதில் அளித்தனர். பிப்., 23ல் கூட்டம் நடத்த, அனுமதி கேட்டு மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தனர்.ஆனால், 14ம் தேதி, கண்ணன் ரவுண்டானா என்ற பகுதியில் கூடி, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர். போராட்டம் நடத்தக் கூடாது என, போலீசார் கூறியும் கேட்கவில்லை.

போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பிய, 40 ஆண்களை கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் ஒத்துழைக்க மறுத்தனர்; பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தினர்.இது தொடர்பாக, டிரைவர் கொடுத்த புகாரில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை, மீண்டும் முஸ்லிம்கள் கூடி, போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக செயல்பட்டனர். கலைந்து செல்லும்படி கூறிய போலீசார் மீது, தண்ணீர் பாட்டில், செருப்பு, கற்கள் ஆகியவற்றை வீசி, கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், போலீசார் காயமடைந்தனர்.எனினும், அமைதியான முறையில் கலைந்து செல்லும்படி, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். சிறிது நேரத்தில், வெளியில் இருந்து வந்த போராட்டக்காரர்கள், அப்பகுதி மக்களை துாண்டிவிட்டு, போலீசாரை தள்ளிவிட்டு, சாலை மறியல் செய்ய முயன்றனர். கைது செய்ய முயன்ற போலீசாரை தாக்கினர்.

கலவரத்தில் ஈடுபட்ட, 82 பேரை கைது செய்து, அரசு பஸ்சில் ஏற்றியபோது, பஸ் கண்ணாடியை உடைத்தனர். இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, ஆறு தெருக்கள் தாண்டி, 70 வயது நிரம்பிய பசுருல்லா, நோய் காரணமாக இயற்கையாக மரணமடைந்தார். அவர், போலீஸ் தடியடியில் இறந்ததாக, வதந்தி பரப்பப்பட்டது. அதை நம்பி, தமிழகம் முழுவதும், பல இடங்களில், முஸ்லிம்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மூன்றாவது நாளாக, நேற்று முன்தினமும் போராட்டம் நடந்தது. வண்ணாரப்பேட்டை அனைத்து முஸ்லிம் ஜமாத்தார்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

இரவில், எஸ்.டி.பி.ஐ., கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள், என்னை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். நேற்றும், 150 பேர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேண்டுமென்றே சில சக்திகளின் துாண்டுதலில், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக, தகவல் கிடைத்திருக்கிறது.

எனவே, பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற, முஸ்லிம் சகோதர – சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில், சிறுபான்மையின சகோதர – சகோதரிகளுக்கு எதிரான எந்த ஒரு செயலையும், அரசு அனுமதிக்காது. ஜெ., அரசு, சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்கும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.