“தேசத்தின் கிரீடமாக திகழும் ஜம்மு காஷ்மீர்”: பிரதமர் மோடி பேச்சு

தேசத்தின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கு சென்றார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார். சுற்றுலாத் துறையில் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.
இதையடுத்து 6,400 கோடி ரூபாய் மதிப்பிலான 53 திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் கவர்னர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சி அடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர். உங்கள் இதயத்தை வெல்ல காஷ்மீருக்கு வந்துள்ளேன். தேசத்தின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது.காஷ்மீரில் சுற்றுலா துறையில் வளர்ச்சியை கொண்டு வர பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறப்பு அந்தஸ்து 370வது சட்ட பிரிவு ரத்து மூலம், காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை மோடியின் உத்தரவாதம் ஆகும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. மக்களுக்கு சவால்களை சமாளிக்கும் தைரியம் உள்ளது.
உங்கள் மகிழ்ச்சியான முகங்களைப் பார்த்து, நாடு முழுவதும் உள்ள 140 கோடி மக்கள் திருப்தி அடைந்துள்ளனர். இன்று துவங்கி வைத்த திட்டங்களால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். ஏழைகளின் நலனுக்கான திட்டங்கள் நாடு முழுவதும் துவங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நிகழ்ச்சியில், ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா பேசியதாவது: பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது. அமர இடம் கிடைக்காமல் தவிக்கும் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மக்கள் கூட்டம் பிரதமர் மோடி மீது வைத்திருக்கும் அன்பு எடுத்துரைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்ரீநகர் சென்றடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் தொலைவில் இருந்து தெரிந்த சங்கராச்சாரியார் மலை உச்சியை தூரத்திலிருந்து பார்த்து வழிபட்டார்.